உடல் மன ஆரோக்கியம்

வேலை-வாழ்க்கை சமநிலை

சூரிய உதயத்திற்கு முன் கண் விழித்து, பயிற்சி செய்து, சமைத்து, சாப்பிட்டு, அல்லது சமைக்காமல் சாப்பிட்டு, அலுவலக வேலையில் அன்றைய நாளுக்கான target, deadline, last date மற்றும் என்ன பெயர் எல்லாம் இருக்கிறதோ அத்தனையும் வைத்து வேலையின் பரபரப்பில் மூழ்குபவர்களில் நீங்களும் ஒருவரென்றால் ஒரு நொடி கணினியிலிருந்து விரல்களை எடுத்துக் கையை உயர்த்துங்கள். இருங்கள், நானும் உயர்த்திக் கொள்கிறேன்.

பரபரப்பான பணிச்சுமையும் சவாலான வேலைகளும் பல வேளைகளில் மனதுக்குப் பிடித்தாலும் நாம் அந்த வேலையின் போக்கில் தொடர்வதற்காகக் கொடுக்கும் விலை மிக அதிகம். வாழ்க்கைக்குப் பணி அவசியம் தான். ஆனால் அது வாழ்க்கையை சுகமாக்கத் தானே அன்றி, வாழ்வையே சுமையாக்குவதற்கு அல்ல. இதை எழுதுவதால் நான் ஏதோ சரியான திட்டமிடல் செய்து பணிச் சுமையை நேர்த்தியாகக் கையாள்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். பணி செய்யும் முறையில் முறைப்படுத்தப்பட்ட சரியான திட்டமிடல் இல்லாது போனால் ஏற்படும் விளைவுகளை அனுபவித்ததினாலேயே இதைக் கூறுகிறேன். பல முறை இவ்வாறான வகையில் வேலை செய்வதைத் தவிர்க்க உறுதி பூண்டு அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தவறியிருக்கிறேன்.

வேலை-வாழ்க்கை சமநிலை

பொருளாதாரத் தேவைகள் தவிர்க்க முடியாமல் அதிகமாகி விட்ட இன்றைய காலக்கட்டத்தில் முதலில் பாதிக்கப்படுவது ஒருவரின் வேலை-வாழ்க்கை சமநிலைதான். வேலை-வாழ்க்கையை சமநிலையில் வைத்திருப்பது என்பது ஒருவர் தன் நேரம் மற்றும் ஆற்றல் ஆகிய இரண்டையும் தன் வேலை மற்றும் தன் வாழ்க்கைக்காக சரியான முறையில் செலவிடுதலைப் பற்றியதாகும். தன் வாழ்க்கை என்று குறிப்பிடுவதில் தன் உடல், மன நலம் பராமரித்தல், குடும்ப நலன், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், சமூக உறவு பேணுதல் மற்றும் சமூகப் பங்கு ஆற்றுதல் ஆகிய அனைத்தும் அடங்கும்.

வேலையில் அதிகமாக மூழ்கும் சூழலில் ஒருவர் முதலில் புறக்கணிப்பது தன் உடல் நலத்தைத் தான்; அதைத் தொடர்ந்து குடும்பத்தோடு செலவிடும் நேரம் குறையத் தொடங்குகிறது. பின், தனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள், பிடித்தமான மற்றைய வேலைகளைப் புறக்கணிப்பது, என்று வேலை-வாழ்க்கை சமநிலையைப் பாதிக்கும் அனைத்து அம்சங்களும் பின்தொடர்கின்றன.

சமீபத்தில் ஏற்காடு சென்ற போது மலையின் உச்சியை ஒட்டி இருந்த ரிசார்ட்டின் பால்கனியில் உணவு இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தவாறு குரங்கு சென்றதைக் காணவே அருமையாக இருந்தது. அதை விட அந்த உயரத்தில் மிக இலகுவாக அது தன்னை balance செய்து கொண்டு செல்வது மிகவும் ஈர்த்தது. இது தான் வேலை-வாழ்க்கை சமநிலையோ?

குரங்கின் பார்வையில்…???

சுமார் 9 வருடங்களுக்கு முன்னால் ஏற்காட்டில் இதே ரிசார்ட்டில் எடுத்த வேறு ஒரு குரங்கின்  (அதிலென்ன சந்தேகம்) புகைப்படம். குரங்குக்கு  balance எவ்வளவு சர்வ சாதாரணமாக வருகிறது. 

வேலை-வாழ்க்கை சமநிலை சீராக இல்லாமல் இருப்பதற்கான அறிகுறிகள்

வேலை-வாழ்க்கை சமநிலை சீரற்று இருந்தால் ஏற்படும் அறிகுறிகளில் சில:

  • பெரும்பாலான நேரத்தை வேலை செய்வதில் கழித்தல்; வேலை நேரத்துக்கான வரையறை இல்லாதிருத்தல்
  • சரியான உணவுப் பழக்கம் இல்லாதிருத்தல், அதாவது நேரம் தப்பி உண்ணுதல், சமச்சீரான உணவு எடுக்க வேண்டும் என்ற கவனம் இன்றிப் போகுதல், ஆரோக்கியமான உணவுத் தேர்வைப் பின்பற்றாதிருத்தல்
  • உடற்பயிற்சியின்மை
  • குடும்பத்துடன் இருக்கும் நேரம் குறைதல்
  • தூக்கமின்மை
  • பொழுதுபோக்குகளில் ஈடுபடாதிருத்தல்
  • உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவுவதற்கு நேரம் இல்லாதிருத்தல்
  • மன அழுத்தம்
  • பொறுமையின்மை, சகிப்புத்தன்மை இல்லாதிருத்தல்
  • சரியான திட்டமிடல் இல்லாதிருத்தல்
  • முன்னுரிமைக் கொடுப்பதில் குளறுபடி ஆகுதல் 
  • எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் மன நிறைவு இல்லாதிருத்தல்
  • தன்னம்பிக்கைக் குறைதல்
  • கவனம் குறைதல்

வேலை – வாழ்க்கை சமநிலையைச் சரியாகக் கையாளத் தவறுவதால் ஏற்படும் விளைவுகள்

வேலை-வாழ்க்கை சமநிலையைப் பேணாத போது ஏற்படும் பாதிப்புகளில் சில:

உடல் / மன சோர்வு: வேலை-வாழ்க்கை சமநிலைப் பாதிப்படைவதற்கான காரணம் நீண்ட நேரம் அலுவலகப் பணிகளில் ஈடுபடுவது தான். தொடர்ந்து போதுமான ஓய்வின்றி பணியில் ஈடுபடும் போது உடல் மற்றும் மனச் சோர்வு தவிர்க்க முடியாது போகிறது.

தூக்கமின்மை: பணிச்சுமை அதிகமாகும் பொழுது தூங்கும் நேரம் ஒத்திப் போடப் படுகிறது. பலரும் இரவு முழுதும் கண்விழித்து வேலை செய்து அதிகாலை நேரத்தில் தூங்கப் போவது வழக்கமாகி விட்டது. நாளடைவில் இது தூக்கமின்மைப் பிரச்சினையை உருவாக்கும்.

குடும்பத்துடனான நேரம் குறைதல்: வேலை-வாழ்க்கை சமநிலைப் பாதிப்படையும் போது ஒருவர் தன் குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைகிறது. மேலும் முக்கிய குடும்ப நிகழ்வுகள், உறவினர் இல்லத்து நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. சம்பாதிப்பதே குடும்பத்தை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதற்காக என்னும் போது அதிலேயே சமரசம் செய்து கொள்வதாக இருக்கிறது கூடுதல் வேலைச் சுமை.

தனக்கான நேரம் குறைதல்: வேலை-சமநிலைப் பாதிப்பினால் தனக்கான நேரத்தையும் ஒருவர் இழக்க நேரிடுகிறது. உடற்பயிற்சி செய்தல், விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற அனைத்துமே வேலை நேரம் நீடிக்கும் போது பாதிக்கப்படுகிறது.

மன அழுத்தம்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களே போதும் மன அழுத்தம் ஏற்பட. தொடர்ந்து வேலை-வாழ்க்கை சமநிலை பாதிக்கப்படும் போது ஏற்படும் அனைத்து விளைவுகளும் மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடியவை.

இவையெல்லாம் சில விளைவுகளே; ஆனால், இவை ஒவ்வொன்றும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

வேலை-வாழ்க்கைச் சமநிலையைப் பேணுவது எப்படி?

மன்னிக்கவும். இதைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளும் சூழலில் தான் நான் இருக்கிறேன். வேலைச் சுமையில் குடும்ப மகிழ்ச்சியையும், வாழ்வின் பல அற்புதத் தருணங்களையும், விருப்பமான பிற துறைகளில் ஈடுபடும் வாய்ப்புகளையும், சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும், பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கான சூழல்களையும் தவற விடும் நம் ஒவ்வொருவருக்கும், வேலை-வாழ்க்கைச் சமநிலையின் தேவையை நினைவுப்படுத்தவே இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.

நம் வாழ்க்கை  நம் கையில், நாம் அமைத்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. வேலை-வாழ்க்கை சமநிலையைப் பராமரித்து வாழ்வின் உன்னத தருணங்களை மனமார அனுபவிப்போம். தள்ளிப் போடாதிருப்போம். ஏனென்றால், வாழ்க்கை மிக அழகானது.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மயக்கும் மாலைப் பொழுது…

yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு.

Read More »

நீங்கள் பிறரைத் திருப்திப்படுத்த நினைப்பவரா?

விசுத்தி சக்கரம் பற்றிய பதிவை எழுதும்போது, குறிப்பாக, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் போது பயன்படுத்திய ‘people pleaser’ என்ற பதத்திலிருந்து உதித்திருப்பதுதான் இந்தப் பதிவு. (விசுத்தி சக்கரம் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நம் அன்றாட வாழ்வில்,

Read More »

இயற்கை அழகில்…

82-வது நாள் ஆசனத்துக்கான பதிவு தயாராக இருந்தாலும், இன்று வானத்தில் கண்ட காட்சியைப் பகிரும் எண்ணம் ‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியை ஒரு நாள் ஒத்திப் போட வைத்திருக்கிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நம்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்