நூலின் தலைப்பு: திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து
நூல் ஆசிரியர்: ச. இரா. தமிழரசு
இறை நூலாக பலராலும், மருத்துவம் சார்ந்த நூலாக சிலராலும் கருதப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருமூலரின் திருமந்திரம் உண்மையில் ஒரு உடற்கூறு அறிவியல் நூல் என்று சொன்னால் வியப்பாகத் தோன்றலாம்.
திருமூலரின் திருமந்திரம் உடற்கூறு அறிவியல் நூல் மட்டுமல்லாமல் தமிழின் தொன்மையை உணர்த்தும் நூலாகவும் உள்ளது. இந்நூல் ஆசிரியரின் வரிகளை இங்கு அப்படியே தருகிறேன்: “ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வைத்திருப்பதில்தான் ஒரு மொழியின் தொன்மை அடங்கியிருக்கிறது. அப்போதே குறிப்புத் தமிழில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார் என்றால் நம் மொழியின் வளமையை என்னவென்பது! ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இத்தனை சொற்கள் என்றால் இந்த இனம் எப்போது தோன்றியிருக்க வேண்டும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. தமிழின் வளமை, திருமூலரின் மருத்துவ அறிவு, அந்த அறிவை விளக்கியும் மேலோட்டமாக வேறு பொருளாக, வாழ்க்கை நெறியாக விளக்கும் அவரது தமிழ் புலமை, இவைதான் திருமந்திரம்.”
திருமூலரின் திருமந்திரம் உடற்கூறு நூல் என்பதற்கான காரணம் என்ன?
திருமூலரின் திருமந்திரத்தின் முதல் அய்ம்பது பாடல்களிலிருந்து சில பாடல் வரிகளை இங்கு எடுத்துக்காட்டிற்காகப் பயன்படுத்துகிறேன். இந்த எடுத்துக்காட்டுகளும் புத்தக ஆசிரியரின் விளக்கங்களிலிருந்துதான் கையாளப்பட்டிருக்கின்றன.
பாடல் 4
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலில் திருமூலர், பிரபஞ்ச விரிவாக்கத்திற்குக் காரணமான அணுக்களே நம் உடலில் உள்ளன என்றும் இந்த அணுக்களே நமது உடல் வளர்ச்சிக்கும் காரணமாகின்றன என்று விளக்குகிறார். மேலும், அணுக்களின் பெருக்க மென்பது அணுப்பகுப்பாகவே நடக்கிறது, அதாவது அணுக்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து பெருகுகிறது என்று விளக்கியுள்ளார். நவீன மருத்துவம் 1800களில் கண்டறிந்த இந்த அணுப்பகுப்பு (cell division) குறித்த அறிவியலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் எழுதியிருக்கிறார்.
விரிவான விளக்கத்தை அறிய, இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள், இந்த இணைப்பிற்குச் செல்லவும்.
பாடல் 25
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
பாடல் 25-ல், திருமூலர், பல நோய்களிலிருந்தும், கிருமிகளிலிருந்தும் இரத்தமே உடலைப் பாதுகாக்கிறது என்றும், இந்த இரத்தத்தில் கலக்கும் சுரப்புகளின் சேர்க்கையால் இரத்தம், உயிர் தரும் ஒளியாக இருக்கிறது என இரத்தத்தின் பணியினைப் பற்றி கூறுகிறார்.
சொற்பொருளோடு கூடிய விரிவான விளக்கத்திற்கு, திருமூலரின் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து என்கிற இந்தப் புத்தகத்தை அமேசான் kindle மூலமாக வாங்கலாம்.
பாடல் 35
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றி புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி யாட்டவு மாமே.
மேற்கூறப்பட்டுள்ள திருமூலரின் 35-ஆவது பாடலில் இருதயத்தின் பணி மற்றும் இருதய சுழற்சியின் நேரமும் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது.
முதலில் மகாதமனி வழியாக இரத்தம் மேலேறி இடது வலது கரோனரி தமனிகள் வழியாக இரத்தம் இருதயத்துக்கு, அதன் இயக்கத்துக்கு அனுப்பப்படுவதை விளக்குகிறார். இப்பாடலின் கடைசி இரு வரிகளில் இருதய சுழற்சியின் நேரம் .8 வினாடி என்பதை கூறியுள்ளார் திருமூலர்.
இந்தப் பாடலின் விரிவான விளக்கத்தை, அதன் சொற்பொருளோடு அறியவும், முதல் அய்ம்பது பாடல்கள் குறித்த உடற்கூறு விளக்கங்களை அறியவும் இப்புத்தகத்தை இந்த இணைப்பின் மூலமாக வாங்கவும்.
சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு
திருமூலர், முக்கிய சக்கரங்களின் எண்ணிக்கை எட்டு என்கிறார். சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு என்கிற பதிவை படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பீனியல் பற்றி 2-ம் நூற்றாண்டிற்கு முன் சிலர் குறிப்பிட்டிருந்தாலும், பீனியல் ஒரு சுரப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது 2-ம் நூற்றாண்டில்தான். அப்பொழுது அதற்கு பீனியல் என்ற பெயரும் அதன் அமைப்பின் காரணமாக வைக்கப்படுகிறது.
20-ம் நூற்றாண்டில், 1958-ல்தான் பீனியல் ஒரு நாளமில்லா சுரப்பு என்பதும் அது மெலடோனின் என்கிற, தூக்கம் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனைச் சுரக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் தனது திருமந்திரத்தில்.பீனியல் சுரப்பி பற்றியும் அதன் அமைப்பு மற்றும் அதன் பணி பற்றியும் விளக்கியிருக்கிறார். இது தொடர்பான பாடல்கள் குறித்த விவரங்களைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இதுவரை படித்து வந்தவர்களின் மனதில் இயல்பாக பின்வரும் கேள்விகள் எழலாம்:
- இந்த விளக்கங்கள் அனைத்தும் ஏன் ஆசிரியரின் கோணமாக இருக்கக் கூடாது? தமிழ் என்பது மிகவும் வளமான மொழி. ஒவ்வொரு வார்த்தைக்குமே பல பொருள் இருக்கக் கூடிய வளமான தன்மை கொண்டது. அப்படியிருக்க, இது ஏன் ஆசிரியர் கூறும் விளக்கமாக இருக்க வேண்டும்?
- இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்கள் சரியானது என்றால், இவ்வாறான பொருளில்தான் திருமூலர் எழுதியிருந்தால், ஏன், இந்தப் பாடல்கள் அனைத்தும் இறைவன் சார்ந்த பாடல்களாகவே காலம் காலமாகக் கருதப்பட்டு வந்தன?
முதல் கேள்விக்கு வருவோம். இதற்கான பதிலை நூலாசிரியரே தன் புத்தகத்தில் கூறியுள்ளார். அந்த வரிகளை அப்படியே தருகிறேன்; “பொதுவாக, திருக்குறள், திருமந்திரம் போன்ற பாடல்களை உரையாக்கும் போது உரையாக்குபவருடைய கண்ணோட்டமும் நம்பிக்கையும் சார்ந்தே உரை இயற்றப்படும். அந்தத் தவறு இதில் நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து எழுதப்பட்டது. உடல் அறிவியலாக விரும்பி விளக்கப் போனால் அனைத்து பாடல்களுக்கும் விரும்பியதைத் தேடுவது சாத்தியமற்றது. அதே போல, திருமந்திரப் பாடல்களின் உண்மை அக பொருள் தொடர்ந்து விரும்பியவாறு அய்ம்பது பாடல்களிலும் பொருந்தி வருவதும் சாத்தியமற்றது. அய்ம்பதுக்கு மேலும் இது தொடர்கிறது.”
இனி, இரண்டாவது கேள்விக்கு வருவோம். இதற்கும் நூலாசிரியரின் பதிலை, இப்புத்தகத்திலிருந்தே எடுத்துத் தருகிறேன்; “உடல் அறிவியலாக எழுதப்பட்ட திருமந்திரம் ஏதோ ஒரு காலத்தில் அதன் அறிவுக் கடத்தலை இழந்திருக்க வேண்டும். பின் வந்தவர்கள் இதன் உண்மையை உணர முடியாம கடவுள் பற்றிய வர்ணனைகளாக எடுத்துக் கொண்டு சிலைகளை வடித்து வழிப்பாட்டுக்கு உரியதாக்கி விட்டிருக்க வேண்டும். இப்போது, உடற்கூறு அறிவியல் வளர்ந்திருப்பதாலேயே நம்மால் பொருத்தி புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துகாட்டுக்கு, இரத்தம் மச்சையில் உற்பத்தியாகிறது என்ற அறிவு தெரிந்திருப்பதாலேயே அந்த குறிப்பிட்ட பாடலின் உள்பொருளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வாய்ப்பு முன்பிருந்தவர்களுக்குக் கிட்டாததால் அவர்களால் அறிவியலை பொருத்தி பார்க்க முடியவில்லை. ஆனால், அன்று நம் தாத்தாக்கள் சொன்ன உடற்கூறு அறிவியல்தான் இன்றைய நவீன மருத்துவம் சொல்கிறது. நம்முடைய இந்த மருத்துவம் அதன் தன்மையில் சரியான திசைவழியில் வளர்ந்திருந்தால், நாம் மருத்துவத்தைத் திருமந்திரத்தில் படித்திருப்போம்.”
நூலாசிரியர் கூறியிருப்பதைப் போல, ஒரு குறிப்பிட்ட சமூக சூழலில் அவற்றை இழந்து நாம் பல ஆயிரம் ஆண்டுகள் பின்தள்ளிப் போய் விட்டோம். திருமூலரின் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து என்கிற இந்தப் புத்தகத்தின் வாயிலாக, தமிழரசு நமது தொன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில், நாம் சிறந்த அறிவியல் சமூகத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதை பறைசாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
திருமூலரின் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து புத்தகத்தை வாங்க, இந்த இணைப்பிற்குச் செல்லவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.