‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியில் 100-வது ஆசனமாக நாம் பார்க்கவிருக்கும் சிரசாசனம், ‘ஆசனங்களின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.. வடமொழியில் ‘சிரச’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Headstand என்று அழைக்கப்படுகிறது.
(ஆசனங்களின் அரசி என அழைக்கப்படும் சர்வாங்காசனத்தைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்).
புவியீர்ப்பு ஆற்றலுக்கு எதிரான நிலையில் செய்யப்படும் சிரசாசனம் அற்புதமான பலன்களை அளிக்கக் கூடியது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா சக்கரங்களைத் தூண்டுவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துதல் ஆகியவை சிரசாசனத்தின் முக்கிய பலன்களில் சில. பெரும்பாலான யோகப்பயிற்சியாளர்களுக்கு சிரசாசனம் பயில்வதன் மூலமே ஆசனப் பயிற்சி முழுமையடைகிறது.
சிரசாசனத்தின் மேலும் சில பலன்கள்
- மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
- முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது
- முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
- நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
- நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது
- ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
- தோள்களையும் கரங்களையும் பலப்படுத்துகிறது
- நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது; ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
- ஆழ்ந்து சுவாசிக்க உதவுகிறது
- இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
- வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது
- வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது
- சீரணத்தைப் பலப்படுத்துகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
- மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது
- மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது
- உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது
- ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது
- தூக்கமின்மையைப் போக்குகிறது
- கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
- கால்களை பலப்படுத்துகிறது; கால் வீக்கத்தைப் போக்குகிறது
- வெரிகோஸ் வெயின் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது
- கூந்தல் நலனைப் பாதுகாக்கிறது; நரைமுடி தோன்றுவதை ஒத்திப் போடுகிறது
- கவனத்தைக் கூர்மையாக்குகிறது
- சிந்தனையில் தெளிவை அதிகரிக்கிறது
- நினைவாற்றலை மேம்படுத்துகிறது
- மன அழுத்தத்தைப் போக்குகிறது
- மன அமைதியை வளர்க்கிறது
செய்முறை
சிரசாசனம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
- தவழும் நிலைக்கு வரவும். உங்கள் உள்ளங்கைகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
- கைகளை மடித்து முன்கைகளைத் தரையில் வைக்கவும். இரண்டு கைவிரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.
- உச்சந்தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் தலையின் பின்புறம் அணைத்தாற்போல் இருக்கும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு கால் முட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தவும்.
- மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களை உங்கள் கை முட்டி நோக்கிக் கொண்டு வரவும். இப்போது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும்.
- மெதுவாக மேலும் கால்களை கை நோக்கி, உங்கள் முதுகு நேராகும் வண்ணம் கொண்டு வரவும். இப்போது தலையின் மீது உடல் எடையைப் போடாமல் உங்கள் முன்கைகள் பெரும்பாலும் உடல் எடையைத் தாங்குமாறு இருக்கவும்.
- மெதுவாக வலது காலைத் தரையிலிருந்து மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வரவும். பின் இடது காலையும் மடித்து வலது கால் அருகே கொண்டு வரவும். பின் இரண்டு கால்களையும் மேல் நோக்கி நேராக உயர்த்தவும்.
- துவக்கத்தில் சில வினாடிகள் இந்நிலையில் இருந்தால் போதுமானது. நாளடைவில் பயிலும் நேரத்தை அதிகரித்து சுமார் மூன்று முதல் அய்ந்து நிமிடங்கள் வரை சிரசாசனத்தில் இருக்கலாம். வருடக் கணக்காக தொடர்ந்து யோகா பயின்று வரும் தேர்ந்த யோகப்பயிற்சியாளர்கள் மட்டும் 30 நிமிடங்கள் வரை இவ்வாசனத்தில் இருக்கலாம்.
- ஆசன நிலையிலிருந்து வெளிவர மெதுவாக வலது காலை மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வந்து பின் இடது காலை வலது கால் அருகே கொண்டு வரவும். பின் வலது காலைத் தரையில் வைக்கவும். பின் இடது காலை வலது கால் அருகே வைக்கவும்.
- மெதுவாக இடுப்பைக் கீழிறக்கி பாலாசனத்தில் சில வினாடிகள் ஓய்வெடுக்கவும்.
குறிப்பு
ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களும் அதிக உடல் எடை உடையவர்களும் கண்டிப்பாக சிரசாசனத்தைத் தவிர்க்கவும்.
தலைக்குக் கீழ் மடித்த விரிப்பொன்றை வைத்துப் பழகவும். துவக்கத்தில் முதுகு சுவற்றை ஒட்டி இருக்குமாறு வைத்து இவ்வாசனத்தனைப் பழகலாம். ஆனாலும், சுவற்றின் மீது உடல் எடை இருக்குமாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தீவிர கழுத்துப் பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, அதிக இரத்த அழுத்தம், இருதய கோளாறு, கண் அழுத்த நோய், குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சிரசாசனம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பின்குறிப்பு
‘இன்று ஒரு ஆசனம்‘ பகுதி இன்றுடன் நிறைவடைகிறது. இனி வரும் நாட்களில் பல்வேறு உடல், மன பிரச்சினைகளுக்கான ஆசனங்கள் மற்றும் மூலிகைகள் குறித்துப் பார்க்கலாம். சக்கரங்கள், முத்திரைகள் மற்றும் பிற பயிற்சிகள் குறித்தும் வரும் நாட்களில் பார்க்கலாம்.
தொடர்ந்து ‘இன்று ஒரு ஆசனம்‘ பகுதியை ஆர்வத்துடன் படித்துப் பயின்ற அனைவருக்கும் எங்களின் நன்றியும், வாழ்த்துகளும்.
யோகாசனம் – 1 முதல் 100 வரை
இது வரை நாம் வனப்பு தளத்தில் பார்த்த 100 ஆசனங்களையும் இப்பகுதியில் உங்களின் வசதிக்காகத் தொகுத்திருக்கிறோம். 1) பதுமாசனம் 36) பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் 71) வீரபத்ராசனம் 1 2) உத்தானாசனம் 37) காகாசனம் 72)
இன்று ஒரு ஆசனம் (99) – அர்த்த சிரசாசனம் (Half Headstand / Upward Facing Staff Pose)
இன்றைய ஆசனமான அர்த்த சிரசாசனம் என்பது சிரசாசனத்தின் பாதி நிலை. வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘சிரசு’ என்றால் ‘தலை’. அர்த்த சிரசாசனம், ஆங்கிலத்தில் Half Headstand என்று குறிப்பிடப்படுவதோடு, நாம் முன்னர் பார்த்திருக்கும்
இன்று ஒரு ஆசனம் (98) – த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம் (One Leg Folded Forward Bend)
வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘அங்க’ என்றால் ‘அங்கம்’, ‘முக’ என்றால் ‘முகம்’, ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘பாதம்’, ‘பஸ்சிமா’ என்றால் ‘மேற்கு’, ‘உத்தானா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ என்று பொருள்.
2 Responses
தொடர்ந்து 100 ஆசனங்கள்…நினைத்துப் பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது… 100 நாட்கள் மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் கொடுக்கப்பட்ட குறிப்புகளும் பயன்களும் செய்முறை விளக்கங்களும் படங்களும் மிக மிக அருமை..
வாழ்த்துகள் பல கோடி..
அடுத்தத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
1 முதல் 100 ஆசனங்கள் வரை எங்களுடன் இணைந்து பயணித்ததற்கும் தங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல கோடி.
விரைவிலேயே புதிய பதிவுகளை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.