உடல் மன ஆரோக்கியம்

சுவாதிட்டான சக்கரத்தின் பலன்களும் சுவாதிட்டான சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

சுவாதிட்டானம் மனித உடலின் முக்கிய சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் ஆகும். வடமொழியில் ஸ்வாதிஷ்டானம் என்று அறியப்படும் இதன் பொருள், ‘ஒருவரின் சொந்த வாழ்விடம்’ என்பதாகும்; அதாவது, ‘ஸ்வ’ என்றால் ‘ஒருவரின் சொந்த’ என்றும் ‘ஆதிஷ்டான’ என்றால் ‘வாழ்விடம்’ அல்லது ‘வீடு’ என்பதாகும். ‘ஸ்வாத்’ என்னும் சொல்லுக்கு ‘மகிழ்ச்சியுடன் அனுபவிக்க’ என்ற பொருளும் உண்டு. சுவாதிட்டானம் ஆங்கிலத்தில் Sacral Chakra என்று அழைக்கப்படுகிறது.

இருப்பிடம்: தொப்புளிலிருந்து சுமார் இரண்டு அங்குலம் கீழே

நிறம்: செம்மஞ்சள் (Orange)

ஒலி: வம்

தொடர்புடைய மூலகம்: நீர்

தொடர்புடைய புலன்: சுவை

சுவாதிட்டானம் படைப்புத் திறன் மற்றும் சுயத்தை அறிதலுக்கான மையமாகும். இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்பு உடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிட்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன. இக்கட்டான சூழலில் எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிட்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து  அறிதல் ஆகியவற்றின் மையம் சுவாதிட்டான சக்கரமாகும். இதுவே உங்கள் கனவுகளுக்கும், விருப்பங்களுக்கும் மையமாகும்.

உள்ளடக்கம்

சுவாதிட்டான சக்கரத்தின் தன்மைகள் மற்றும் சுவாதிட்டானத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

பிறருடனும் உங்களுடனுமே நீங்கள் கொண்டிருக்கும் உறவு, படைப்புத் திறன், ஆழ்மனதில் தோன்றும் உணர்வுகள் மற்றும் பிறரிடம் உங்கள் எண்ணங்களை  வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவற்றை நிர்வகிப்பது சுவாதிட்டான சக்கரம். நெகிழ்வுத்தன்மை மற்றும் சூழலுக்கு ஏற்ப உங்களைத் தகவமைத்துக் கொள்ளும் பாங்கு, மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது சுவாதிட்டான சக்கரம். ஆற்றல், மகிழ்ச்சி, வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு ஆகியவைக்கும் சுவாதிட்டான சக்கரத்தின் இயக்கமே பொறுப்பாகும்.

சோம்பல், தன்னம்பிக்கை இல்லாதிருத்தல், கோபம், வெறுப்பு, அகம்பாவம், பொறாமை, பேராசை ஆகிய எதிர்மறை எண்ணங்கள் சுவாதிட்டான இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய பண்புகளாகும். நம்மிடம் இருக்கக் கூடிய குறைகளை உணர்ந்து அலசி ஆராயும் பண்பும், இருக்கும் குறைகளை ஒப்புக் கொள்ளும் நேர்மையும், அவற்றை அகற்றுவதில் வெளிப்படையான அணுகுமுறையும் கொள்வது சுவாதிட்டான சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க உதவும்.

சுவாதிட்டானம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனையும் வளர்சிதை மாற்றத்தையும் நிர்வகிக்கிறது. அட்ரீனல் சுரப்பி, மறு உற்பத்தி உறுப்புகள், மண்ணீரல், பித்தப்பை ஆகியவற்றையும் சுவாதிட்டான சக்கரம் நிர்வகிக்கிறது.

சுவாதிட்டானம் சீராக இயங்குவதற்கான அறிகுறிகள்

சுவாதிட்டான சக்கரம் சீராக இயங்குவதைக் கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

  • நெகிழ்வுத்தன்மை வளர்தல்
  • சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் வளர்தல்
  • படைப்புத் திறன் அதிகரித்தல்
  • தன்னம்பிக்கை வளர்தல்
  • தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரித்தல்
  • சுற்றியுள்ள உலகத்தைப் பார்த்து, உணர்ந்து, இரசிக்கும் விருப்பம் கூடுதல்
  • தங்களின் திறன் மற்றும் விருப்பத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல் மற்றும் அத்திறன்களை வளர்ப்பதன் மூலம் சுயத்தை உணரந்து நிறைவான வாழ்க்கை வாழ்தல்

சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கம் நம்முள் இருக்கும் திறன்களை வெளிக் கொண்டு வரச் செய்வதோடு வாழ்க்கையை இரசித்து அனுபவித்து வாழ உதவுகிறது.

சுவாதிட்டானம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் சுவாதிட்டானம் சீராக இயங்காததை உணர்ந்து கொள்ளலாம்:

உடல் அறிகுறிகள்
  • தாம்பத்திய உறவு சார்ந்த கோளாறுகள்
  • மறு உற்பத்தி உறுப்பு சார்ந்த கோளாறுகள்
  • மாதவிடாய் கோளாறுகள்
  • குழந்தைப் பேறு அடைய முடியாமை
  • இரத்த சோகை
  • மலச்சிக்கல்
  • அடி முதுகில் தொடர் வலி
  • இடுப்புப் பிரச்சினைகள்
  • மூட்டுப் பிரச்சினைகள்
  • மண்ணீரல் கோளாறுகள்
  • பித்தப்பை பிரச்சினைகள்
  • போதைப் பழக்கங்களுக்கு அடிமையாதல்
மன அறிகுறிகள்
  • அச்சம்
  • பாதுகாப்பற்ற உணர்வு
  • தன்னம்பிக்கைக் குறைபாடு
  • பொறாமை
  • மூர்க்கத்தனம்
  • படைப்புத் திறன் குறைவாக இருத்தல்
  • தன்மதிப்பு இல்லாமை
  • ஊக்கமின்மை
  • மன அழுத்தம்
  • பதட்டம்
  • எவருடனும் கலந்து பழகாத தன்மை; எவருடனும் நெருங்கி பழகுவதற்கு அஞ்சுதல்
  • அதிகமாக உணர்ச்சி வசப்படுதல்
  • சுவாதிட்டான சக்கரத்தின் இயக்கத்திற்கேற்ப பிறரைச் சார்ந்திருத்தல் அல்லது பிறரை அதிகாரம் செய்தல்

சுவாதிட்டான சக்கரத்தைச் சீராக இயங்க வைப்பது எப்படி?

  • சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • எசன்சியல் எண்ணெய்
  • சுய ஊக்கம்
  • உணவு
  • பொது விதிகள்

சுவாதிட்டான சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

சுவாதிட்டான சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Bergamot
  • Black Pepper
  • Cardamom
  • Clary Sage
  • Fennel
  • Jasmine
  • Neroli
  • Orange
  • Patchouli
  • Rosewood
  • Sandalwood
  • Ylang Ylang

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து சுவாதிட்டான சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

சுய ஊக்கம்

சுய ஊக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் மூலாதார சக்கரம் பற்றிய பதிவில் பார்த்தோம். சுய ஊக்க வாக்கியங்களை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் உங்கள் உடல், மன நலனை மேம்படுத்த முடியும். வாழ்வின் வளங்களை இரசித்து அனுபவிக்கவும் நிறைவான வாழ்க்கை வாழவும் இயலும்.

சுவாதிட்டான சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்
  • என் சுவாதிட்டான சக்கரம் சிறப்பாக இயங்குகிறது
  • நான் ஒரு படைப்பாளி.
  • நான் என் உடலையும் மனதையும் நேசிக்கிறேன்
  • என்னிடம் இருக்கும் ஆற்றலை நான் உணர்கிறேன்
  • வாழ்க்கையை நன்கு இரசித்து வாழ எனக்குத் தகுதி உண்டு
  • நான் வாழ்வின் இன்பங்களையும் வளங்களையும் ஈர்க்கிறேன்
  • என் உணர்ச்சிகள் சமநிலையில் உள்ளன
  • என் மனம் அமைதி நிலையில் இருக்கிறது
  • ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் என் மனம் ஈடுபாடு கொள்கிறது
  • எனக்கு தனித்தியங்கும் திறன் இருக்கிறது
  • என் தனித்துவத்தைப் பேணும் அதே நேரத்தில் நான் அனைவருடனும் எளிதாகவும் மரியாதையுடனும் பழகுகிறேன்
  • என்னையும் பிறரையும் நான் மதிக்கிறேன்
  • நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ்கிறேன்

சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். பிறிதொரு நாளில் இதை விரிவாகப் பார்க்கலாம்.

சுவாதிட்டான சக்கரத்திற்கான உணவு

கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றையேனும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

  • கேரட்
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு
  • காளான்
  • தேங்காய்
  • பூசணிக்காய்
  • எள்
  • ஆரஞ்சு
  • மாம்பழம்
  • பப்பாளி
  • மாதுளை
  • ஸ்ட்ராபெர்ரி
  • தேன்
  • கடலை வகைகள்
  • மீன்

சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

இதற்கு முந்தைய பதிவில் மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள் பற்றிப் படித்திருப்பீர்கள். இப்பொழுது, சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கத்திற்காக உங்களின் தினசரி வாழ்வில் செய்யக் கூடிய செயல்கள் பற்றி பார்க்கலாம்:

  • விளையாட்டுத்தனமான மனநிலையைத் தரும் செயல்களில் ஈடுபடுங்கள். உதாரணத்திற்கு, இசைக்கு ஏற்ப நடனமாடுவது (நடனம் ஆடத் தெரியவில்லையென்றாலும்), சிறு குழந்தைகளுடன் விளையாடுவது போன்றவை. நீங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளையும் விளையாட்டுத்தனம் கலந்து செய்யுங்கள்.
  • வரைதல், வண்ணமடித்தல், இசைக்கருவி பயிலுதல் போன்ற படைப்புத் திறன் சார்ந்த செயல்களில் ஈடுபடுங்கள்.
  • தாம்பத்திய உறவில் விருப்பமுடன் ஈடுபடுங்கள்.
  • சுவாதிட்டான சக்கரத்தின் மூலகம் நீர் என்பதால் தண்ணீரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் செயல்களில் ஆர்வமாக ஈடுபடுங்கள். நீச்சல் பழகுதல், குளம், ஆறு, ஏரி ஆகியவை இருக்குமிடத்திற்கு அடிக்கடி சென்று உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள்; கடற்கரைக்குச் சென்று தண்ணீரில் நிற்பதும், கடற்கரை மணலில் அமர்ந்து மனதுக்கு ஓய்வளிப்பதும் சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு உதவும்.
  • சுற்றியுள்ளவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். சக மனிதர்களிடம் மரியாதை காட்டுங்கள்.
  • சுவாதிட்டான சக்கரத்தை மனதில் வைத்து தியானம் செய்யவும்.
  • ஆரஞ்சு நிறப் பொருட்களை வீட்டில் உங்கள் கண்ணில் படும் இடங்களில் வைக்கவும்.
  • உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியூட்டக் கூடியவற்றை உங்கள் வீட்டில் ஆங்காங்கே வைக்கவும். பூக்கள், கலைவேலைப்பாடுகள், ஓவியங்கள், செடிகள் என உங்களுக்கு பிடித்தவற்றை, உங்கள் மனதிற்கு மகிழ்ச்சித் தரக்கூடியவை உங்களைச் சுற்றி இருக்குமாறு செய்யுங்கள்.
Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

2 Responses

    1. உங்கள் கேள்விக்கு நன்றி. உடலில் எந்த சக்கரம் பலவீனமாக இருக்கிறதோ, அந்த சக்கரத்தின் செயல்பாடுகளைத் தூண்டக் கூடிய ஆசனங்களைப் பயிலலாம். அனைத்து சக்கரங்களும் சீராக இயங்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்கரத்தின் செயல்பாடுகளைச் செழுமைப்படுத்தும் ஆசனங்களைச் செய்யலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்