பல்வேறு முத்திரைகளின் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்ப்பதற்கு முன், முத்திரை குறித்த சில முக்கியமான கேள்விகளையும் அவற்றிற்கான விடைகளையும் பார்க்கலாம்.
1) முத்திரை பயிற்சிகளை அனைத்து வயதினரும் செய்யலாமா?
ஆறு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முத்திரைகளைப் பயிலலாம். ஆயினும் ஆறிலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ளவர்கள் குறிப்பிட்ட சில முத்திரைகள் மட்டுமே பயிலலாம். முத்திரை பயில்வதற்கு உச்ச வயது வரம்பு இல்லை.
2) முத்திரை பயிற்சிகளை எப்போது செய்யலாம்?
முத்திரை பயிற்சிகளை அதிகாலை வேளைகளில் செய்வது சிறப்பான பலன் கொடுக்கும். ஆயினும் மதியம், மாலை மற்றும் இரவு வேளைகளிலும் முத்திரைகள் பயிலலாம். குறிப்பிட்ட ஒரு வேளையில் தொடர்ந்து செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.
3) ஒவ்வொரு முத்திரைக்கும் பல்வேறு பலன்கள் உண்டு என்பதால் ஒரு நாளில் பல்வேறு முத்திரைகள் பயிலலாமா?
ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முத்திரைகள் வரை பழகலாம். சில குருமார்கள் அறிவுரைப்படி ஒரு நாளில் ஆறு முதல் எட்டு முத்திரைகள் வரை பழகலாம். எந்த ஒரு சிக்கலுக்குமான மூல காரணத்தை அறிந்து அக்காரணத்தைக் களைவதற்கான முத்திரை செய்தாலே போதுமானது. உதாரணத்திற்கு, சீரணக் கோளாறு மற்றும் தலைவலியால் அவதிப்படும் ஒருவரின் தலைவலிக்கான காரணம் அசீரணம் என்னும் பொழுது, அசீரணத்தை சரி செய்யும் முத்திரையைப் பயின்றாலே தலைவலி சரியாகி விடும்.
4) முத்திரைகளை வெறும் வயிற்றில் பயில வேண்டுமா?
முத்திரைகளை வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். ஒரு கோப்பைத் தண்ணீர் அருந்தி விட்டு முத்திரைகளைப் பயிலலாம். காபி, டீ போன்ற பானங்கள் அருந்தினால் அரை மணி நேரம் கழித்தும் உணவு உட்கொண்டால் சுமார் மூன்று மணி நேரம் கழித்தும் முத்திரைகளைப் பழகலாம்.
5) முத்திரை பயிற்சி முடித்த பின் உடனே உணவு சாப்பிடலாமா?
முத்திரை பயிற்சி முடிந்து அய்ந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு எதையும் உட்கொள்ளலாம்.
6) முத்திரைகளை வெறும் தரையில் அமர்ந்தவாறு செய்யலாமா?
முத்திரைகளை வெறும் தரையில் அமர்ந்து பயிலலாம். அல்லது தரையில் பாய் அல்லது வேறு எதேனும் விரிப்பை விரித்து அதில் அமர்ந்து பழகலாம். மின்கடத்தியல்லாத ரப்பர் விரிப்புகளின் மீது அமர்ந்து முத்திரைகளைப் பயிலக் கூடாது. தரையில் விரிப்பைப் போட்டு அமர முடியாதவர்கள் பாதங்கள் தரையில் படுமாறு நாற்காலியில் அமர்ந்து முத்திரைகளைப் பழகலாம். தீவிர உடல் நலக் கோளாறு உள்ளவர்கள் படுக்கையில் படுத்தவாறு பழகலாம். நேரம் மற்றும் வாய்ப்பு குறைவாக இருந்தாலோ தேவை ஏற்பட்டாலோ முத்திரைகளை நடந்தவாறோ பயணம் செய்தவாறோ கூட பழகலாம். முத்திரை பயிலும் போது முதுகும் தலையும் நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
7) மாதவிடாய் காலங்களில் முத்திரை பழகலாமா?
மாதவிடாய் காலங்களிலும் முத்திரை பழகலாம்.
8) கர்ப்பமாயுள்ள பெண்கள் முத்திரைகள் பழகலாமா?
கர்ப்பம் தரித்த பெண்கள் குறிப்பிட்ட சில முத்திரைகளை இத்துறை நிபுணர்களின் ஆலோசனை பெற்று செய்யலாம்.
9) யோகாசனம், பிராணாயாமம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றோடு முத்திரைகளையும் செய்யலாமா?
முத்திரை பயிற்சிகளை முதலில் செய்து விட்டு யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம். காலையில் பிராணாயாமம் பழகுபவர்கள், பிராணாயமம் செய்து முடித்த பின் முத்திரைகளைப் பழகலாம்.
2 Responses
மிக உபயோகமான குறிப்பு நன்றி
எங்கள் தளத்திற்கு வருகை தந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.