உடல் மன ஆரோக்கியம்

சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் (சென்னையின் வயது 382 அல்ல என்பதை அறிவீர்களா?)

வெப்பத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்தில் சுமார் ஏழு மாதங்கள் சென்னை உங்களுக்கு ஏற்றதல்ல. கண்ணுக்கு இரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசத்தை நீங்கள் விரும்புவீர்களாயின், சென்னை உங்களின் ‘பார்க்க வேண்டிய இடங்கள்’ பட்டியலில் பின்னுக்குப் போகலாம். ஆனால், கனிவான மனங்களும் அருமையான வரவேற்கும் பண்பும், பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை அரவணைக்கும் இணக்கமான மனங்களை உடைய மனிதர்கள் வாழும் இடத்தை நீங்கள் விரும்புவீர்களானால் உங்கள் விடுமுறைக்கு ஏற்ற இடம் சென்னைதான்.

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் உலகத்தின் மாபெரும் நகரங்களில் 36-வது இடத்திலும் இருக்கும் சென்னை, இந்தியாவின் முக்கிய கலாச்சார நகரங்களில் ஒன்று. இது தென் இந்தியாவின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று நாம் சென்னையில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்க்கலாம்.

சாவதானமாக சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள், பை சகிதம் மூன்று நாள் பயணமாக சென்னை வரலாம். நேரம் குறைவாக இருந்தால் சென்னையின் முக்கிய இடங்களை மட்டும் பார்க்க ஒரு நாள் பயணமாகச் சென்னை வரலாம்.

வனப்பு தளத்தில் பயணம் பற்றிய கட்டுரைகள் ஏன் என்று யோசிக்கிறீர்கள் என்றால் எங்களின் இந்தப் பதிவைத் தவறாமல் படிக்கவும். 

சென்னைக்கு வயது வெறும் 382-தானா?

ஆண்ட்ரூ கோகன் மற்றும் ஃப்ரான்சிஸ் டே ஆகிய இருவரும் உள்ளூர் நாயக்குகளிடமிருந்து மானியமாக 1639-ல் பூந்தமல்லியில் நிலம் பெற்றுக் கொண்ட வருடமே சென்னை பிறந்த வருடமாக, மறைந்த திரு. எஸ். முத்தையா அவர்கள், ‘சென்னை – மறுகண்டுபிடிப்பு’ என்ற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். வெறும் மணல்திட்டாக இருந்த பகுதியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என ஒவ்வொரு கிராமமாக இணைத்து சென்னையை விரிவுப்படுத்தினார்கள் எனவும் அவர் எழுதியுள்ளார்; அதாவது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புப் பகுதி விரிவடைந்தது என்று கூறலாம். ஆனால், சென்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பகுதி அல்ல என்பதுதான் சரி.

சென்னையின் வயது 2000-க்கும் மேல்

சென்னை 2000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான வரலாறு கொண்டது. இன்றைய பெருநகர சென்னையில் இருக்கும் எழும்பூர், மயிலாப்பூர், சாந்தோம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருவான்மியூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் பெரும்பாலானவை புலியூர்க்கோட்டம் என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய பகுதியாக 2000 வருடங்களுக்கு முன்னால் குரும்பர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகின்றன. மேலும் புலியூர் கோட்டம் தனக்கான கலாச்சாரம், இசை முதலிய முன்னேறிய சமூகத்தின் அடையாளங்களோடு செழித்து இருந்ததற்கும் பல நாடுகளுடன் வர்த்தக உறவு பேணி வந்ததற்குமான வரலாற்று ஆதாரங்களும் இருக்கின்றன. 

குரும்பர்களுக்குப் பின்னால் சோழர்கள், பல்லவர்கள் என தொடர்ந்து பலரின் ஆளுகைக்குப் பின் இறுதியில் ஆங்கிலேயரின் கைக்கு சென்னை வந்தபின் தான் அதன் வரலாறு துவங்குவதாகக் கூறுவது எவ்விதம் சரியாக இருக்க முடியும்? பல கிராமங்களையும் அவர்கள் இணைத்து சென்னையை உருவாக்கினார்கள் என்றும் கூற முடியாது. ஏனெனில் இப்பொழுது சென்னையில் இருக்கக் கூடிய முன்னாள் கிராமங்கள் அனைத்தும் இணைந்ததுதான் 2000 வருடத்துக்கு முந்தைய புலியூர்க்கோட்டம்.

மதராசபட்டினம் என்ற பெயர் கொண்ட இடத்தில் நிலம் வாங்கிய ஆங்கிலேயர்கள், ‘மதராசபட்டினம்’ என்று அழைப்பது தங்களுக்குக் கடினமாக இருக்கவே அவ்விடத்தை மதராஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

இந்தியாவின் முதல் Surveyor General-ஆன Colonel Colin Mackenzie, சென்னை எனப்படும் புலியூர்க்கோட்டத்தை 2000 வருடங்களுக்கு முன்னர் குரும்பர்கள் ஆட்சி செய்ததைப் பற்றி ஆதாரங்களுடன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னை 2000 வருடங்கள் பழமையானது என்பதற்கான ஆதாரங்கள் பலவும் வரலாற்று ஆய்வாளர்களாலும் வரலாற்று ஆர்வலர்களாலும் பகிரப்பட்டுள்ளன.

பழைய கற்காலத்தை, அதாவது Paleolithic (கிமு 25 இலட்சம் வருடங்கள் முதல் கிமு 10,000 ஆண்டுகள் வரை) காலத்தைச் சேர்ந்த ஆயுதங்கள் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது இப்பகுதியின் பழமையை எடுத்துரைக்கும் ஒரு சான்றாகும். இப்பகுதியில் கற்கால மனிதர்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களையும் Robert Bruce Foote என்கிற பன்முகத்தன்மை கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் 1863-ல் கண்டுபிடித்துள்ளார். .

13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் தாம்புரம் (இன்றைய தாம்பரம்) புலியூர்க்கோட்டத்தின் கிளைப்பிரிவான சுரத்தூர் நாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை 1970-ஆம் ஆண்டில் பதிப்பித்த சென்னை மாநகரக் கல்வெட்டுகள் என்ற நூலின் வாயிலாகவும் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் வாயிலாகவும் புலியூர்க்கோட்டத்தின் பரப்பெல்லை  மற்றும் புலியூர்க்கோட்டம் பற்றிய செய்திகள் காணப்படுவதாகக் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளரான து. சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியவற்றிலிருந்து பார்க்கும் போது, புலியூர்க்கோட்டத்தின் கீழ் புலியூர் நாடு, மாங்காடு நாடு, எழுமூர் நாடு, சுரத்தூர் நாடு போன்ற எட்டு நாட்டுப்பிரிவுகள் இருந்ததும் ஒவ்வொரு நாட்டுப்பிரிவின் கீழ் இருந்த ஊர்களில் தற்பொழுதைய சென்னையைச் சேர்ந்த பகுதிகளான கோயம்பேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர், பல்லவபுரம், சாந்தோம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, இராயபுரம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளும் இடம்பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அது போல, கிராமங்கள் அரசரின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், கிராம சபைகள் செயல்பட்டதும் அவை தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக விளங்கி சிறப்பாகச் செயல்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றன. குறிப்பாக, சோழர் காலத்தில் ஒன்றாம் இராஜராஜன் மற்றும் ஒன்றாம் குலோத்துங்கன் காலத்து கிராம சபைகள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதற்கான அதிகாரத்தை அரசுகள் வழங்கியதும், அவ்வாறான செயல்பாடுகளே பல்லவர்கள் மற்றும் விஜயநகர அரசர்கள் காலம் வரை தொடர்ந்தது தெரிய வருகிறது. மணலி மற்றும் ஆதம்பாக்கத்தில் இத்தகைய கிராம சபைகள் செயல்பட்டது திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிய வந்திருக்கிறது.

9-வது நூற்றாண்டிற்கும் முந்தைய காலக்கட்டத்திலேயே சுறுசுறுப்பாக இருந்த துறைமுகப் பகுதியான மதராஸபட்டணத்தின் பெயர் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றிலும் குறிக்கப்பட்டுள்ளதிலிருந்து மதராஸபட்டினத்தின் தொன்மையை அறியலாம்.

ஆக, சிறு கிராமங்களாக இருந்தவற்றை ஆங்கிலேயர் இணைத்து சென்னையை உருவாக்கினார்கள் என்ற வாதமும் அடிபட்டுப் போகிறது. எனவே சென்னையின் வரலாறு 2000 ஆண்டுகளையும் தாண்டி பழமையானது என்பது தெள்ளத்தெளிவு.

சென்னையின் வரலாற்றைப் பற்றி சிறப்பான கட்டுரைகளை எழுதியிருக்கும் திரு. R. Rangaraj அவர்களுக்கு மிகுந்த பாராட்டுகளும் நன்றியும். (படிக்க: https://thefederal.com/opinion/adieu-muthiah-its-now-time-to-celebrate-the-real-history-of-chennai/)

சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள்

என் எழுத்து வேலை சார்ந்து பல்வேறு நகரங்களின் வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டிடங்கள் பற்றி அலச வாய்ப்பு கிடைத்த காலகட்டத்தில், திடீரென்று ஒரு நாள் சென்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டி நேர்ந்தது. சென்னையில் பார்ப்பதற்கான சுற்றுலா தலங்கள் என்பது வேறு சில மாநிலங்களின் நகரங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவாகத் தோன்றியது; குறிப்பாக வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டிடங்கள். சென்னையின் வரலாற்றுப் புகழ் கட்டிடங்கள் என்று பெரும்பாலும் நாம் கூறுவது டச்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவையே, அதாவது வெறும் 500 ஆண்டுகளுக்குள்ளான வரலாறே அவற்றிற்கு உண்டு; அவையும் சொந்த மண்ணைச் சேர்ந்தவர்களின் புகழ் பாடுவது அல்ல. 2,000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த சென்னையில், அத்தகைய பழமையை உணர்த்துவதான  கட்டுமானங்கள் எல்லாம் காலவெள்ளத்தில் காணாமல் போய் விட்டனவா? சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் எனக்கு  வரலாற்றில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு சென்னைவாசியைப் போல இது ஆதங்கமான விஷயம்தான். 

இந்த கூவம் ஆறையே எடுத்துக் கொள்ளுங்களேன். இதன் இன்றைய நிலை என்னவென்று நாம் எல்லோரும் அறிவோம். பண்டைய தமிழர் காலத்தில் ரோமப் பேரரசு உட்பட உலகின் பல பகுதிகளோடுமான வணிகத்துக்கு இந்த ஆறு பயன்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கும் இந்த கூவம் ஆற்றின் பயணம் சென்னையின் பல பகுதிகளையும் கடந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வழிநெடுக பசுமையும் செழிப்புமாய் இருந்திருந்த காலத்தையும் இப்பொழுதைய நிலையையும் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

Photo by Sri Ranjani Mukundan on Unsplash

1880-ல் கூவம் ஆறு

 நன்றி:https://www.past-india.com/photos-items/cooum-river-in-chennai-old-photo-1880/#iLightbox[gallery12582]/0[/caption]

புள்ளிவிவரக் கணக்குப்படி, 1980-களில் கூட 600-க்கும் அதிகமான நீர்நிலைகள் சென்னையில் இருந்திருக்கின்றன. இப்பொழுது அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. பழைய தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால் சென்னையின் அழகு எப்பேற்பட்டதாயிருந்தது என்று தெரிய வரும். சமீபத்திய வருடங்களின் வரலாறையே கைநழுவிப் போகவிட்டிருக்கும் போது 2000 ஆண்டு கால வரலாறைப் பற்றி என்ன சொல்ல?

கடற்கரைகள்

கடற்கரைக்குச் செல்வது கலவையான உணர்வைக் கொடுக்கிறது. அகன்ற பரப்பளவில் இருக்கும் கடலைப் பார்த்ததும் மனம் குதூகலிக்கிறது. அதே நேரத்தில் கடலின் பிரமாண்டம் நாம் இப்பூமியின் முன்னே எத்தனை சிறியவர்கள் என்பதையும் உணரச் செய்கிறது. பரந்து விரிந்த கடல், இடைவிடாமல் கரையை மோதும் அலைகள், அலைகளின் ஓசை (அமரர் கல்கியின் அலை ஓசை நினைவுக்கு வருகிறது) இதமான கடற்காற்று, காற்றோடு அவ்வப்போது நாக்கில் கடல் நீரின் உப்பு கரிப்புச் சுவை, சூரிய உதயம், சூரிய அத்தமனம், சூரிய ஒளியில் தகதகக்கும் கடல், பவுர்ணமி நிலவொளியில் அலையின் அழகு, “மாங்கா, தேங்கா, பட்டாணி, சுண்டல்” என்று நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கும் விளம்பரக் குரல்கள் என கடற்கரைக்குச் செல்வதே ஒரு உற்சாகமான அனுபவம்தான்.

சென்னையில் இருக்கும் கடற்கரைகளில் சில:

மெரினா கடற்கரை

Photo by Ragu Clicks on Unsplash

உலகத்தின் இரண்டாவது பெரிய நகர்ப்புற கடற்கரையான மெரினா கடற்கரை, சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று. பார்த்ததுமே இதன் பிரம்மாண்டம் மனதைக் கொள்ளைக் கொள்ளும். சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமன நேரத்தில் மெரினா கடற்கரைக்குச் செல்வது அபாரமான அனுபவத்தைத் தரும். மக்கள் அதிக அளவில் இக்கடற்கரைக்கு வருகைத் தருவதால், மெரினாவில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகம் காணப்படும். மாலை நேரங்களில் சிற்றுணவு விற்கும் கடைகள் இயங்குவதால் உணவுப் பிரியர்களுக்கு இது மிகவும் விருப்பமான கடற்கரை. காணும் பொங்கல் மாதிரியான முக்கிய நாட்களில் மக்கள் வெள்ளத்தில் கடல் கூட கண்ணுக்குத் தெரியாமல் போகக் கூடும். 

கிளிஞ்சல்கள் பிரியர்களுக்கு இங்கு நல்ல வேட்டை கிடைக்கும். கிளிஞ்சல் மாலை, கிளிஞ்சல் காதணி, கிளிஞ்சல் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை வீட்டில் செய்வீர்களானால் கண்டிப்பாக மெரீனா கடற்கரைக்கு சென்று வரவும். 

பெசன்ட் நகர் கடற்கரை
Photo by Partha Narasimhan on Unsplash

மெரினா கடற்கரையை விட மிகச் சிறியதாக இருந்தாலும், பெசன்ட் நகர் கடற்கரை சுத்தமாக இருப்பதாலும் ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவாக இருப்பதாலும் பலராலும் விரும்பப்படுகிறது. பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகில் இருக்கும் அஷ்டலக்ஷ்மி கோவில் மற்றும் பெசன்ட் நகர் சர்ச் சென்னையின் பிரபலமான வழிபாட்டுத் தலங்களில் இடம் பெறுகின்றன. பெசன்ட் நகர் கடற்கரை எலியட்ஸ் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. 

தென்றல் கடற்கரை

வால்மீகி நகரில் அமைந்திருக்கும் தென்றல் கடற்கரையின் அமைதி மனதைக் கொள்ளைக் கொள்ளும். சுத்தமான, மாசற்ற, பசுமையான இக்கடற்கரைப் பகுதி நீர் விளையாட்டுகளுக்கும் படகு சவாரிக்கும் பெயர் பெற்றது. இக்கடற்கரை திருவான்மியூர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்

பல்வேறு மதங்களைச் சார்ந்த மனிதர்கள் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் வாழும் சென்னை நகரத்தில் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் இருப்பது இயல்பானதுதான். இதோ முக்கிய வழிபாட்டுத் தலங்கள்:

கோவில்கள்

சென்னையில் இருக்கும் பழங்காலக் கோவில்கள் அக்காலத்திய கட்டுமானத் திறனைப் பறைசாற்றுபவையாய் காலம் கடந்து நிற்கிறது. நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவரோ அல்லாதவரோ, இக்கோவில்கள் கண்டிப்பாகக் காணப்பட வேண்டியவை:

கபாலீசுவரர் கோவில்

சென்னையின் புராதன கோவில்களில் ஒன்றான ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கபாலீசுவரர் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் தற்பொழுதைய கட்டுமானம் விஜயநகர அரசர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

பார்த்தசாரதி கோவில்

எட்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி கோவில் ஒரு கட்டிடக் கலை அற்புதம். திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் இக்கோவில், கடற்கரைக்கு அருகில் உள்ளது.

காளிகாம்பாள்  கோவில்

1640-ஆம் வருடம், ஜார்ஜ் டவுனில் கடற்கரைக்கு அருகில் கட்டப்பட்ட காளிகாம்பாள் கோவில் தற்பொழுதைய இடத்துக்கு 1678-ல் மாற்றப்பட்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த சிறிய, அழகான கோவிலின் கட்டடக்கலை தனித்துவமானது.

ஆதீஸ்வரர் கோவில்

சமண மதத்தவரின் கோவிலான ஆதீஸ்வரர் கோவில் கிமு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிலர் இக்கோவில் கிபி 4 அல்லது 5-ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறுவர். சமண மதத்தவரின் அற்புதமான கோவில்களில் ஒன்றாக இக்கோவில் கருதப்படுகிறது.

தேவாலயங்கள்

சென்னையில் உள்ள புகழ் பெற்ற தேவாலயங்களில் சில:

சாந்தோம் தேவாலயம்

மெரினா கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த அழகான சாந்தோம் தேவாலயம். சாந்தோம் கதீட்ரல் பசிலிகா என்றும் அழைக்கப்படும் இந்த தேவாலயம், ஏசுநாதரின் பன்னிரண்டு இறைத்தூதர்களில் ஒருவரான புனித தோமையரின் கல்லறையின் மீது கட்டப்பட்ட பசிலிகா என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சம்.

புனித மேரி தேவாலயம்

1680-ல் கட்டப்பட்ட புனித மேரி தேவாலயம், ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் என்பதோடு இதுதான் Suez-ன் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பழமையான Anglican தேவாலயம் ஆகும். குண்டு துளைக்காத வண்ணம் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டையின் நிலத்தில் அமைந்துள்ளது.

அர்மீனியன் தேவாலயம்

ஜார்ஜ் டவுனில் உள்ள அர்மீனியன் சாலையில் கட்டப்பட்டுள்ள அர்மீனியன் தேவாலயம் 1712-ல் அர்மீனியர்களால் கட்டப்பட்டது. இத்தேவாலயம் 1772-ல் புனரமைக்கப்பட்டது.

மசூதிகள்

பல மதங்களைச் சார்ந்தவர்களின் வழிபாட்டுத்தலங்களும் சென்னையில் உள்ளன. இந்தியாவின் பெரிய மசூதிகளில் ஒன்று சென்னையில் உள்ளது. சென்னையில் உள்ள புகழ்ப்பெற்ற மசூதிகளில் சில:

ஆயிரம் விளக்கு மசூதி

அண்ணா சாலையில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு மசூதி இந்தியாவில் உள்ள பெரிய மசூதிகளில் ஒன்றாகும். சென்னையின் மையத்தில் அமைந்திருக்கும் இம்மசூதி 1810-ஆன் ஆண்டு கட்டப்பட்டது.

வாலாஜா மசூதி

பெரிய மசூதி என்று அழைக்கப்படும் வாலாஜா மசூதி 1795-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. எஃகு மற்றும் மரம் இல்லாமல் இந்த அழகான மசூதி கட்டப்பட்டுள்ளது. சிலர் கருதுவது போல் இது சென்னையின் பழமையான மசூதி அல்ல. காசி வீரண்ணா என்பவரால் ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்டதே பழைய மசூதியாகும். அம்மசூதியைக் குறித்த எந்தத் தகவல்களும் இப்பொழுது கிடைக்கப் பெறவில்லை. 

3) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

Photo by Rishi Ragunathan on Unsplash

இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1855-ல் தோற்றுவிக்கப்பட்டது. மூர் மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்ட இப்பூங்கா இடத் தேவை மற்றும் பராமரிப்புக் காரணங்களுக்காக 1976-ல் சென்னை புறநகரில் உள்ள வண்டலூரில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டிற்கு இடம் மாற்றப்பட்டது. 510 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இவ்வுயிரியல் பூங்காவில் 170-க்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்கின்றன. நீங்கள் நடை விரும்பியாக இருந்தால் இப்பெரிய பரப்பளவில் காலாற நடக்கலாம். தேவைப்படுபவர்கள் இந்த உயிரியல் பூங்காவில் இருக்கும் பாட்டரியால் இயங்கும் வண்டிகளில் ஏறி பூங்காவைச் சுற்றிப் பார்க்கலாம்; அல்லது இங்கு வாடகைக்கு விடப்படும் மிதிவண்டிகளிலும் பயணம் செய்யலாம்.

4) ஹட்ல்ஸ்டன் தோட்டம்

Source: http://adayarbanyantree.blogspot.com/2009/05/

சென்னையின் பிரபலமான, 60,000 சதுர மீட்டர் தூரத்திற்கு வேர்கள் பரந்து இருக்கும் அடையாறு ஆலமரத்தின் வாழ்விடமான ஹட்ல்ஸ்டன் தோட்டத்தின் 260 ஏக்கர் பரப்பளவு பல அரிய வகை மரங்களுக்கும், வெளிநாட்டுப் பறவைகளுக்கும் வாழ்விடமாக உள்ளது. சென்னையின் வெப்பத்திலிருந்து அற்புதமான இளைப்பாறல் தரும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஹட்ல்ஸ்டன் தோட்டத்தைச் சென்னை வரும்பொழுது கண்டிப்பாக ஒரு எட்டு போய் பார்த்து விடவும்.

5) செம்மொழி பூங்கா

தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற தகுதிநிலை அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2010-ஆம் ஆண்டு செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இப்பூங்காவின் 8 கிளைத் தோட்டங்கள் பல வகையான பூக்களும் மூலிகைகளும் மரங்களுமாக மிக அருமையான இயற்கை சூழலைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. சென்னையில் அமைதியான இடத்தில் இலயிக்க விரும்புபவர்கள் நிச்சயம் காண வேண்டிய இடம் செம்மொழி பூங்கா.

6) அண்ணா நூற்றாண்டு நூலகம்

Source: http://www.annacentenarylibrary.org/2011/02/sections.html

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 ஏக்கர் பரப்பளவில் 3.75 இலட்ச சதுர அடியில் அமைந்திருக்கிறது. இது தரைத்தளம் மற்றும் எட்டு மாடிகள் கொண்டது. இந்நூலகத்தில் 5.5 இலட்சம் புத்தகங்கள் இருக்கின்றன என்பது புத்தகப் பிரியர்களுக்கான சிறப்புச் செய்தி. இங்கு பல மொழிகளில் புத்தகங்கள் மற்றும் e-புத்தகங்களும் உள்ளன. குழந்தைகளுக்காக, 15,000 சதுர அடியில் 60,000-க்கும் மேற்பட்ட புத்தங்கங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வகையில் கதை சொல்லுதல், மாயாஜால காட்சிகள், பொம்மலாட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன. தங்களின் சொந்த புத்தகத்தைக் கொண்டு வந்து இங்கு படிப்பதற்கும் தனிப் பகுதி இருக்கிறது.

7) பிர்லா கோளரங்கம்

பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், எட்டு அரங்கங்களும் அவற்றில் சுமார் 500 காட்சிப் பொருட்களுக்கும் மேல் கொண்டது. இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக 360 கோண வானத் திரையரங்கம் அமைக்கப்பட்டது. பிர்லா கோளரங்கத்தில் தினமும் பிரபஞ்சம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன.

8) புனித தோமையர் மலை

புனித தோமையர் மலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசுவின் இறைத்தூதர்களில் ஒருவரான புனித தோமையர் தன்னைக் கொல்ல வந்தவர்களிடமிருந்து த்ப்பிக்கப் புகலிடம் தேடி இங்கிருந்த குகையில் மறைந்து வாழ்ந்த வந்த போது, கொலைக்காரர்களால் கொல்லப்பட்ட இடம் புனித தோமையர் மலை. இக்குன்றின் மேல் ஒரு தேவாலயம் இருக்கிறது. இக்குன்றின் உச்சியை அடைய படிக்கட்டுகள் உள்ளன. இரு சக்கர வண்டியிலும் உச்சியை அடையலாம். இங்கு வரும் அனைவரும் இக்குன்றின் அமைதியால் நிச்சயம் ஈர்க்கப்படுகிறார்கள்.

சென்னையின் பொழுதுபோக்கு பூங்காக்கள்

பொழுதுபோக்கு பூங்காக்கள் பலவகையிலும் சுவாரசியமானவை. பொழுதுபோக்கு பூங்காக்களில் சில ஆபத்தான விளையாட்டுகளில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் பொதுவாக அவை சுவாரசியமானவை. மற்ற எந்த சுற்றுலாதலத்திற்கும் இல்லாத சிறப்பு பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இருக்கிறது. நீங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிக்குச் செல்லும் போது அனைத்து சுற்றுலாவாசிகளின் பொதுவான உணர்வுகள் வியப்பு, மகிழ்ச்சி, பரவசம் போன்றதாக இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களில் தகவல்கள் அறியும் வேட்கையைச் சுற்றிலும் காண முடியும். பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரியவர்களும் சிறியவர்களாக ஆவதை, தங்களை மறந்து பல வயது குறைந்து கொண்டாடுவதை, பலவித உணர்வுக் கலவைகளைக் காண முடிகிறது; ஒரு வகையில் கடல் அலையில் நிற்பதைப் போன்று; ஆனால் பல மடங்கு அதிக வீரியத்தோடு. அந்த வகையில் பொழுதுபோக்கு பூங்காக்கள் சுவாரசியமானவை.

சென்னையில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காக்கள்:
  • VGP Golden Beach
  • Kishkinta
  • MGM Dizzie World
  • VGP Universal Kingdom
  • Maayajaal
  • Queensland

விரைவில் சென்னையைச் சுற்றிலும் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

8 Responses

  1. செம்மையான சென்னையை
    தங்களின் செழுமைமிகு கட்டுரை சுவாரசியமான சென்னையாக வெளிப்படுத்தியிருக்கிறது.
    சென்னையின் வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் சான்றுகளின் மூலம் பெருமைமிகு சென்னையின் வரலாறு பழைய கற்காலத்திற்கும்( Paliolithic Age) உரியது என்பது உண்மையில் வியப்பில் ஆழ்த்தக்கூடியதொரு தகவல். கோடம்பாக்கம் சுற்றியுள்ள சில பகுதிகள் மட்டுமே புலியூர் எனும் கிராமம் என நினைத்திருந்த வேளையில் புலியூர் கோட்டம் என்பது பெருநிலப்பரப்புகளை உள்ளடக்கிய பல அரசர்களின் ஆளுமையின் கீழ் இருந்த ஒரு இராஜ்யம் என்பது கூடுதல் தகவல்
    சிறப்பான கட்டுரை…வெகுசனப் பத்திரிகைகளில் எழுதினால் அதிகம் பேரை சென்றடையுமே

    1. மிக்க நன்றி. ஆம், உண்மையிலேயே சென்னையின் புராதன வரலாறு வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தக் கூடியதுதான். தொடர்ந்து பதிவுகளைப் படித்தும் கருத்துகளைத் தெரிவித்தும் வருகிறீர்கள். இது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

      சில தினசரிகளில் இது குறித்த செய்திகள் வந்திருக்கின்றன என்றாலும் வாராந்திர இதழ்கள் பற்றித் தெரியவில்லை. தாங்கள் சொல்வது போல் வெகுசனப் பத்திரிகைகள் மூலம் அதிகம் பேரை தகவல்கள் சென்றடையும்தான். எனக்கு யார் வாய்ப்பளிப்பது…

    1. மிக்க நன்றி ரகு. தொடர்ந்து படித்தும் ஊக்கமளித்தும் வருவதற்கு நன்றி. ஒரு எழுத்தாளரின் பாராட்டு என்ற முறையில் இது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. நன்றி.

  2. அருமை ரமா.இவ்வளவு தகவல்களையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.நம் சென்னைப் பற்றிய தெளிவான விவரங் ளை அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டாய்.

    1. சென்னைக் குறித்த இந்தப் பதிவைப் படித்ததற்கும், கருத்தைப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி லலிதா. இது எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்