Table of Contents
விசுத்தி சக்கரம் பற்றிய பதிவை எழுதும்போது, குறிப்பாக, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் போது பயன்படுத்திய ‘people pleaser’ என்ற பதத்திலிருந்து உதித்திருப்பதுதான் இந்தப் பதிவு. (விசுத்தி சக்கரம் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்)
நம் அன்றாட வாழ்வில், நம்மில் பெரும்பாலானோர் பல சந்தர்ப்பங்களில் people pleaser-ஆக இருந்திருக்கிறோம். People pleaser-ஆக இருப்பது சரிதானா, நீங்கள் ஒரு people pleaser-ஆ என்று இப்போது பார்க்கலாம்.
சரி, people pleaser என்பவர் யார்?
People pleaser என்பவர் பிறரின் திருப்திக்காக, பிறரை மகிழ்ச்சிப்படுத்த அல்லது பிறருக்கு மன வருத்தம் தருவதைத் தவிர்க்க பிரயத்தனம் செய்பவர்கள்; பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பிறருக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லாதவர்கள். அப்படியானால், இவர்கள் தங்கள் விருப்பங்களை விட்டுக் கொடுக்கும் தியாக உள்ளம் கொண்டவர்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். People pleaser என்பவர் தன்னலமற்ற அன்பு கொண்டவர்கள் என்றோ பிறரிடம் அதீத கருணை காட்டுபவர்கள் என்றோ சொல்வது சரியல்ல.
ஏன் People Pleaser-ஆக இருக்கிறார்கள்?
முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுவோம். People pleaser-கள் வேடம் போடுகிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் people pleaser-ஆக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம். அதற்கும் முன்னால், பிறரைத் திருப்திப்படுத்தத் தாங்கள் முனைவதற்கான காரணங்களாக அவர்கள் பொதுவாகக் கூறுவது என்ன என்று பார்க்கலாம்:
- மறுத்துப் பேசுவதால் பிறர் மனம் புண்படும் என்பதால் என்னால் மறுத்துப் பேச முடியாது
- விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் சரியானது; அதனால், என் விருப்பத்தை விட்டுக் கொடுக்கிறேன்.
- பிறர் கேட்டு நான் மறுக்காமல் செய்யும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், அவர்களைத் திருப்திப்படுத்துகிறேன்.
ஆனால், இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை தாங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும், குறிப்பாக மற்றவர்கள் தங்களை நல்லவர்களாக நினைக்க வேண்டும் என்பதுதான்; இன்னும் குறிப்பாக, தங்களை யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதுதான்.
காலம் காலமாக நமக்கு சொல்லப்பட்டு வந்தது நாம் பிறர் மனம் கோண நடக்கக் கூடாது என்பதுதான். ஆமாம், பிறர் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பது முழுமையாக சரி. ஆனால், உங்கள் சுய விருப்பங்களை மறுத்து, உங்கள் மனதில் உள்ளதை மறைத்து பிறரை மகிழ்ச்சிப்படுத்த நினைப்பது கண்டிப்பாக சரியானது அல்ல. ஏனென்றால், பிறரின் மகிழ்ச்சி, விருப்பம் என்று எதை நீங்கள் காரணமாக நினைத்தாலும் உங்கள் ஆழ்மனதில் பிறரால் நீங்கள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்தப் பிம்பத்துக்கு உயிர் கொடுப்பதுதான் அடிப்படை காரணம். ஆக, உங்களுடைய இத்தகைய people pleasing நடவடிக்கைக்கு பிறரின் விருப்பத்தைக் காரணமாகக் கருதினாலும் நீங்கள் அறிந்தும் அறியாமலும் முன்னிலைப்படுத்துவது உங்களைத்தான்.
மிகவும் சிலருக்கு இயல்பிலேயே பிறருக்கு உதவும் பண்பு இருக்கும். ஆனாலும், இவர்களின் வெளிப்படைத்தன்மையே இவர்கள் people-pleasers அல்ல என்பதும் இவர்கள் சுபாவத்திலேயே பிறருக்கு உதவக் கூடியவர்கள் என்பதையும் காட்டிக் கொடுக்கும். இவர்கள் பிறரைத் திருப்திப்படுத்த எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பிறருக்கு விட்டுக் கொடுப்பார்கள்.
People pleaser-ஆக இருப்பதற்கான சில காரணங்கள்:
1) அங்கீகாரம் தேடுதல்
தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் people pleaser-ஆக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். உங்களைப் பிறர் பொறுமைசாலி என்று நினைக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்? அவர்கள் முன்னிலையில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்கள்; நீங்கள் பிறரது பிரச்சினையைக் காதுகொடுத்து கேட்பவர் என்று பிறர் நினைக்க வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? அவர்கள் உங்களிடம் பேச வரும்போதெல்லாம், உங்களின் வேலைகளை ஒத்திப் போட்டு அவர்களிடம் பேசுவீர்கள். நீங்கள் விட்டுக் கொடுப்பவர் என்று பிறர் நினைக்க வேண்டும் என்றால், விட்டுக் கொடுத்தே பழகுவீர்கள். இத்தகைய அனைத்து சூழல்களிலும் நீங்கள் சுயத்தை இழக்கிறீர்கள். பொறுமைசாலி என்ற பெயர் வாங்க வேண்டி, தார்மீக கோபத்தையும் வெளிக்காட்ட மாட்டீர்கள்; பிறரின் பிரச்சினையைக் காது கொடுத்து கேட்பவர் என்ற பெயர் வாங்க வேண்டுமென்றால் உங்களின் வேலைகளை ஒத்திப் போடுவதால், உங்களின் நேரத்தை நீங்கள் மதிப்பதில்லை, உங்கள் வேலையை நீங்கள் முக்கியமென்று நினைத்தால், அதைத் தள்ளிப்போடவும் மாட்டீர்கள். உங்களுக்கு சுயமதிப்பு குறைவாக இருந்தால்தான் அடுத்தவரின் அங்கீகாரம் தேவைப்படும். அடுத்தவரின் அங்கீகாரத்திற்காக people pleaser-ஆக ஆகும்போது சுயமதிப்பு மேலும் குறைந்து போகும்.
2) பாதுகாப்பற்ற உணர்வு
பிறரைத் திருப்திப்படுத்த முனைவதற்கு பாதுகாப்பற்ற உணர்வு ஒரு முக்கிய காரணம். தான் தனிமைப்படுத்தப்படுவோமா என்ற அச்சத்தினால் ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக பிறரைத் திருப்திப்படுத்தும் பழக்கம் உருவாகிறது. பெரும்பாலும், சிறு வயதில் பெற்றோரின் அன்பும், கவனமும் கிடைக்காத குழந்தைகளுக்கும், தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற உணர்வு உருவாகும். இக்குழந்தைகள் அன்பை எதிர்பார்த்தும், கடும் விமர்சனங்களிலிருந்து தப்பிக்கவும், தன் அம்மா, அப்பாவைத் திருப்திப்படுத்தத் தொடங்குவார்கள். இங்கு தொடங்கும் people pleasing பண்பு, அவர்கள் வளரும் போது எந்த சூழலிலும் இத்தன்மையையே கடைப்பிடிக்க வைக்கிறது. இது சார்பு மனப்பான்மையையும் வளர்க்கிறது.
3) செயற்கையாக இணக்கமான சுற்றுச் சூழலை ஏற்படுத்த விரும்புதல்
இது மிகப் பொதுவாகக் காணப்படும் காரணமாகும். தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களோடு இணக்கமாக இருப்பதற்காக, ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தையும் தவிர்த்தும், பிறர் கருத்துகளில் பிழை இருந்தாலும் அதை ஏற்றும் சூழலில் இணக்கத்தைக் கட்டிக் காக்க நினைக்கும் இவர்களும் people pleaser-கள்தான். தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் தங்களின் கருத்துகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழலாம் என்கிற அச்சம் காரணமாக விவாதத்தில் இறங்குவதற்கு மாறாக, பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்வதால் சமரசமான சூழல் நிலவும் என்று இவர்கள் கருதுவதால் நேர்மையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடம் கொடுக்காமல், பிறரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் இணக்கமான சூழலை உருவாக்க முயல்வார்கள். இதன் விளைவாக நேருவதெல்லாம், எதிர்மறையான விளைவுகளே. இவர்களால் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது; அது மட்டுமில்லாமல் இவர்களின் people pleasing நடவடிக்கையின் காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு சுயமதிப்பும் குறைந்து போகும். பிறராலும் கருத்துத் தெளிவு இல்லாதவர்களாகவே இவர்கள் கருதப்படுவார்கள்.
4) பிறரின் மதிப்பீட்டைச் சார்ந்திருக்கும் மனப்பான்மை
இது people pleaser-களிடம் மிகப் பொதுவாகக் காணப்படும் குணம். தங்களைப் பற்றிய பிறரது மதிப்பீடு குறித்து இவர்கள் மிகவும் கவனம் செலுத்துவார்கள். சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் பிறர் மதிப்பீட்டை சார்ந்து இருக்க மாட்டார்கள். சுயமதிப்பின்மை மற்றும் தன்னம்பிக்கையின்மை காரணமாகப் பிறர் தன்னைப் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீட்டை வைத்தே தன்னை இவர்கள் மதிப்பிடுவார்கள். பிறருக்குத் தன்னுடைய உதவி தேவை, பிறருக்கு தன்னுடைய ஆலோசனை தேவை போன்ற பிறருக்குத் தன்னால் ஆகக் கூடிய உதவிகளை வைத்தே இவர்கள் தங்களை மதிப்பிட்டுக் கொள்வார்கள். ஆக, பிறரின் மதீப்பீடு இவர்களுக்கு அவசியமாகிறபடியால் people pleasing இவர்களுக்கு இயல்பான ஒன்றாகிப் போகிறது. இப்படிப்பட்டவர்கள், தன்னைப் பற்றித் தான் முன்நிறுத்த நினைக்கும் பிம்பத்துக்கு மாறாக பிறர் தன்னை நினைக்கும் சூழல் ஏற்பட்டால், மனம் குமைந்து போவதோடு அவர்களைத் தன்னை சரியாக நினைக்க வைக்க என்ன செய்யலாம் என்றும் தீவிரமாக யோசித்து நடைமுறைப்படுத்த முயல்வார்கள்.
5) இயல்பான குணமே அதுதான்
மிக மிக சிலருக்கு இயல்பாகவே பிறரைத் திருப்திப்படுத்தும் மனநிலை இருக்கும். அவர்களால் பிறர் மனம் வருந்தக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால், இவர்கள் தங்களுடைய பிம்பத்தைத் தூக்கி நிறுத்த முனைவதில்லை; தங்களைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சில நல்ல வார்த்தைகள், சில தலையாட்டல்கள், சில செயல்பாடுகளால் பிறரைத் திருப்திப்படுத்த முடிந்தால் திருப்திப்படுத்தலாம் என்பது மட்டுமே இவர்களின் எண்ணமாக இருக்கும். ஆக, இவர்கள் people pleasing நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அது அவர்களின் இயல்பான சுபாவமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் பிறரைத் திருப்திப்படுத்த பேசிவிட்டு அவர்களுக்குப் பின்னால் குறை கூற மாட்டார்கள்.
People Pleasing-னால் ஏற்படும் விளைவுகள் என்ன?
என்ன காரணமாக இருந்தால் என்ன, அடுத்தவர்களைத் திருப்திப்படுத்தத்தானே செய்கிறோம், இதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டும் – என்னைத் திருப்திப்படுத்த அல்ல.
அதற்கும் முன்னால், people pleasing-கிற்கும் பெருந்தன்மைக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள். பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள் பிறருடன் பகிர்தலையும் பிறருக்கு உதவுவதையும் இயல்பாக செய்யும் அதே நேரத்தில் தன் சுய அடையாளத்தை, தங்கள் தன்மதிப்பை இழக்க மாட்டார்கள்; ஆனால், people pleasing செய்பவர்கள், பிறரின் அங்கீகாரத்திற்காக தங்களைத் தாழ்த்தி பிறரை உயர்த்துவார்கள்.
பிறர் உங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு மாறான பிம்பமாகவே அவர்கள் உங்களைப் பார்ப்பார்கள்; உதாரணத்திற்கு, பிறர் உங்களிடம் ஆலோசனை கேட்கும் பொழுது வெளிப்படையான விமர்சனங்களை வைக்காமல் அவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் கருத்துகளை நீங்கள் கூறினால் என்ன ஆகும்? உங்களிடமிருந்து ஆக்கபூர்வமாக கருத்துகள் வராது என்ற முடிவுக்கு நீங்களே அவர்களைத் தள்ளி விடுவீர்கள்; ஆக, நீங்கள் நினைப்பதற்கு மாறான விளைவையே உங்களின் people pleasing நடவடிக்கை ஏற்படுத்தும்.
தொடர்ந்து பிறரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடும் பொழுது ஒரு கட்டத்தில் உங்களுக்கே உங்களின் பேச்சும், செயல்பாடுகளும் அர்த்தமற்றவையாகத் தெரியும்.
அது மட்டுமல்லாமல், பிறரைத் திருப்திப்படுத்த உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை செய்யும் போது அல்லது அவர்களின் கருத்துக்கு மாறான கருத்து உங்களுக்கு இருந்தால் கூறாமல் இருக்கும் போது, உங்களுக்கு முதலில் ஏற்படும் மன அழுத்தம், நாளடைவில் அந்த குறிப்பிட்ட சூழல் மீதான கோபமாகவும், அந்தக் குறிப்பிட்ட நபர் மீதான கோபமாகவும் மாறும் – விளைவு, யாரை நீங்கள் திருப்திப்படுத்த விரும்பினீர்களோ அவர்கள் மீதே உங்களுக்கு சலிப்பும் கோபமும் ஏற்படும் – என்ன, நீங்கள் அதையும் வெளிக்காட்டாமல் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்படும்.
ஆக, people pleaser-ஆக இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள்:
- சுயமதிப்பை இழத்தல்
- தன்னம்பிக்கை இல்லாதிருத்தல்
- சுய அடையாளம் இழத்தல்
- மன அழுத்தம்
- சலித்துப் போதல் – தொடர்ந்து பிறரைத் திருப்திப்படுத்தும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடும் பொழுது பெரும்பான்மையான நேரங்களில் அதற்கான நேர்மறையான எதிர்வினைகள் உங்களுக்குக் கிடைக்காமல் போவதால் சலிப்பு ஏற்படும்.
People pleasing உங்களின் உடல் நலத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை சொல்லாமல் இருக்க முடியாது. தொடர்ந்து பிறரைத் திருப்திப்படுத்த நீங்கள் உங்கள் ஆழ்மனதுக்கு உண்மை என்று தெரிந்தவற்றிற்கு மாறாக பேசும் பொழுதும் செயல்படும் பொழுதும், உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். மன அழுத்தம் கல்லீரல் பாதிப்பதில் தொடங்கி சிறுநீரகம், இருதயம் என உடல் உறுப்புகளின் இயக்கங்களைப் பாதிக்கும்.
நீங்கள் People Pleaser-ஆ?
நீங்கள் people-pleaser-ஆ என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்? இதோ, அதற்கான அறிகுறிகள்:
1) ‘முடியாது’ என்று மறுப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கும்.
2) பிறர் உங்களை விரும்ப வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள்; ஆனால் அந்த விருப்பம் இல்லாதவர் போல் நடந்து கொள்வீர்கள்.
3) பிறர் உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.
4) அனைவரோடும் ஒத்துப் போவது போல் காட்டிக் கொள்வீர்கள்.
5) நேர்மையான விமர்சனங்களை முன்வைப்பதையும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் செய்வதையும் தவிர்ப்பீர்கள்.
6) உங்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் போது அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள்.
7) உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அங்கீகாரத்திற்காக அவர்களைப் போலவே நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள். உங்களின் செயல்பாடுகளை அதற்கு ஏற்றாற் போல் அமைத்துக் கொள்வீர்கள்.
8) பிறருக்கு உங்கள் மேல் அதிருப்தி ஏற்பட்டால், அதை உங்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது; எப்படியாவது அவர்களுக்கு உங்கள் மேல் உள்ள அதிருப்தியைப் போக்க முயற்சி செய்வீர்கள்.
9) பிரச்சினைகளைப் பேசித் தீர்க்காமல் பிரச்சினைகளைப் பேசாமல் தீர்க்க முடியுமா என்று பார்ப்பீர்கள்; பிரச்சினைகளை சந்திக்காமல் விலகிப் போவீர்கள்.
10) உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது உங்களின் பொறுப்பு என்பது போல் செயல்படுவீர்கள். அதனால், அவர்களுக்கு எந்த வருத்தமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, வெளிப்படையாக எதையும் பேசுவதைத் தவிர்ப்பீர்கள்.
11) உங்களிடம் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைவாக இருக்கும்.
12) அடிக்கடி உங்கள் வாயில் வருவது ‘மன்னிப்பு’ – செய்யாத தவறுகளுக்குக் கூட மன்னிப்புக் கேட்பீர்கள்.
13) பிறர் உங்கள் முயற்சிகளை அங்கீகரிக்கவில்லை என்ற குறை உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
14) உங்களுக்கான எல்லைகளை வரையறுக்க மாட்டீர்கள்.
இதற்கு மேலும் People Pleaser-ஆக இருப்பது சரிதானா?
People pleaser-ஆக இருப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தோம். அதையும் மீறி people pleaser-களாக இருப்பதை நீங்கள் விரும்பினால் அல்லது மாற்றிக் கொள்ள முடியாமல் இருந்தால், இதோ உங்களுக்காக:
உங்களைச் சுற்றி உள்ளவர்களை people-pleasing செய்யும் தொடர் முயற்சிகளில் நீங்கள் இழப்பது உங்கள் தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் மட்டுமல்ல, ஒருவரை திருப்தி செய்யும் முயற்சியில் இன்னொருவரை கண்டிப்பாக பாதிக்கத்தான் செய்வீர்கள். அந்த இன்னொருவர் பெரும்பாலும் உங்களுக்கு மிக நெருங்கியவர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு. நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நமக்கு நெருக்கமானவர்கள் எப்பொழுதும் நம் மீது அன்பு செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையால் அவர்களின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளைத் தாண்டி வேறு சிலரைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இதனால், நீங்கள் கூடுதலாக இழக்கப்போவது உங்களுக்கு நெருக்கமானவர்களின், உங்கள் மீது உண்மையான பாசம் கொண்டவர்களின் நம்பிக்கையைத்தான். எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லவர்களாக யாராலும் இருக்க முடியாது. அப்படி இருக்க முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக நேர்மையாக, வெளிப்படையாக பேசவோ பழகவோ முடியாது. ஆக, அனைவரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் நீங்கள் செய்து கொள்ளும் சமரசங்களும் சொல்லக் கூடிய உண்மைக்குப் புறம்பானவைகளும் அவர்களையே பாதிக்கும்; அதனால் உங்கள் உறவும் பாதிக்கும். எளிமையாகச் சொல்வதானால், people pleaser-ஆக இருக்காதீர்கள்.
People Pleasing-லிருந்து எப்படி விடுபடுவது
People pleasing-லிருந்து விடுபட இதோ சில குறிப்புகள்:
1) மறுக்க பழகுங்கள்
இதுதான் சரியான ஆரம்பமாக இருக்கும். பிறர் கேட்கும் உதவியின் முக்கியத்துவத்திற்கேற்ப செயல்படுங்கள். எல்லாவற்றிற்கும் ‘சரி’ என்று சொல்லாதீர்கள். உங்களுக்கான எல்லைகளை வரையறுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் கேட்கும் உதவி அவசியமானதா, சரியானதா, அதற்கான நேரம் உங்களுக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு பதில் அளியுங்கள். மறுப்பது என்பது பிறரை ஒதுக்குவது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். People pleasing-கிற்காக செய்யாமல் தேவையை ஒட்டி செய்வதே உண்மையான உதவி. மறுக்க வேண்டிய சூழல் வரும்போது அடுத்தவர் மனம் புண்படாமல் மறுக்கவும் – அவ்வாறு மறுப்பது people pleasing ஆகாது. அதே நேரத்தில் நீங்கள் அவர்களை மறுப்பது கூடாது. வாழ்க்கையின் அடிநாதமே நாம் சமூகத்துடன் வைத்திருக்கும் உறவுதான்.
2) உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்துங்கள்
- பிறர் கூறுவதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் நேர்மையாக வெளிப்படுத்துங்கள்.
- அடுத்தவர் கூறும் தகவல்களினால் உங்களுக்கு ஏற்படும் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். வியப்பு காட்டினால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று வியந்தாற் போல் பேசுவதைத் தவிர்க்கவும். பிறர் பகிரும் தகவல்கள் உங்களுக்கு ஏற்படுத்தாத உணர்வுகளை ஏற்பட்டாற் போல் காட்டாதீர்கள். மனதில் தோன்றாத பரிவு, அக்கறை, கோபம் போன்றவற்றை அடுத்தவரைத் திருப்திப்படுத்த போலியாகக் காட்டுவது இதில் அடக்கம்.
3) அடுத்தவரின் கண்கள் வழியாக உங்களைப் பார்க்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை நீங்கள் தீர்மானியுங்கள். உங்கள் கருத்துகளும் விருப்பங்களும் செழுமையடைவதற்காக வேறு வடிவம் எடுக்கலாமே தவிர, பிறரைத் திருப்திப்படுத்த உங்கள் கருத்துகளுக்கு முலாம் பூசாதீர்கள். பிறரைத் திருப்திப்படுத்து நோக்கில் உங்கள் கருத்துகளும் விருப்பங்களும் மாறிக் கொண்டே இருந்தால் விரைவில் உங்கள் சுய அடையாளத்தை இழக்க நேரிடும்.
பிறரின் மகிழ்ச்சி, துயரங்களில் பங்கெடுப்பதுதான் மனிதத்தன்மை. எந்த ஒரு மனிதனாலும் சமூகத்தை புறம்தள்ளி வாழ முடியாது. சக மனிதர்களிடம் நட்பு பாராட்டுதலும் நல்ல உறவைப் பேணுவதும்தான் மனிதத்தன்மை.
மறுக்கப் பழகும் அதே நேரத்தில் அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
எல்லைகளை வரையறுக்கும் அதே நேரத்தில் உங்களைச் சுற்றி அன்பைப் பரப்புங்கள். எல்லைகள் வரையறுக்கப்படுவது நீங்கள் நீங்களாக வாழ்வதற்குத்தானே அன்றி நீங்கள் சமூகத்தை ஒதுக்கி விட்டு வாழ அல்ல.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அழகானது, அர்த்தமுள்ளது. அதை நிறைவாகவும் இரசனையோடும் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. People pleaser-களாக இருப்பதன் மூலம் யாராலும் தங்களுடைய வாழ்க்கையை நேர்மையாகவோ இரசனையோடோ வாழ முடியாது; அடுத்தவர்களை நிறைவடையச் செய்யவும் முடியாது. People pleasing சுற்றியுள்ளவர்களை உங்களிடமிருந்து அன்னியப்படுத்தும்; ஆனால், நேர்மையான அணுகுமுறை உங்கள் வாழ்க்கையை அழகாகவும் நிறைவாகவும் ஆக்குவதோடு சுற்றியுள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவை வளர்க்க உதவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.