நேற்றைய கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. இதுவரை இக்கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாங்கள் அறிந்தவற்றில் முக்கியமானவை:
1) பெரும்பாலானவர்கள் சுலபமான ஆசனங்களை நாங்கள் பதிவேற்றுவதை விரும்புகிறார்கள். இது முழுக்கவே எங்களுக்கு ஏற்புடையது. ஏனென்றால், yogaaatral.com தொடங்கப்பட்ட போது இதன் முக்கியக் குறிக்கோள் எல்லாரும் செய்யும் வண்ணம் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே. ஆனாலும், சிலர் கடினமான ஆசனங்களை விரும்புவதாகத் தெரிவித்திருப்பதால், அவர்களுக்காக சில கடினமான ஆசனங்களை அவ்வப்போது வழங்குகிறோம்.
2) பெரும்பாலானவர்கள் சவாசனத்தை அனுபவித்து உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர். சிலர் சவாசனத்தில் உறக்கம் வருவதாகக் கூறியுள்ளனர். உறக்கம் வருவது முழுக்க இயல்பானதே. பொதுவாக, போதுமான உறக்கம் இல்லாதவர்களுக்கு சவாசன நிலையில் உறக்கம் வரும். உறக்கத்தின் அவசியத்தை எவ்வளவு வலியுறுத்தினாலும் போதாது. சமச்சீரான உணவும் நல்ல உறக்கமும், உடற்பயிற்சியும் சிறந்த உடல் நலத்துக்கு இன்றியமையாததாகும். ஆகவே, சரியான நேரத்துக்கு உறங்கத் தொடங்குங்கள். உடலுக்குத் தேவையான ஓய்வை நீங்கள் கொடுத்தால், விழித்திருந்து சவாசனத்தை அனுபவித்து உணரலாம். சிலருக்கு படுத்தாலே உறக்கம் வரும். அப்படிப்பட்டவர்களுக்கும் சவாசனத்தில் உறக்கம் வருவது இயல்புதான். இவர்கள், சவாசனத்தின் போது தங்களின் மனதை உடல் உறுப்புகளின் மேல் செலுத்தச் செலுத்த உறக்கம் வருவது தவிர்க்கப்பட்டு தெளிவாக ஓய்வாசன அனுபவத்தைப் பெற முடியும்.
3) அனைவரும் ஏகோபித்தமாகத் தெரிவித்திருப்பது மூலிகைப் பற்றிய தகவல்கள் தொடர வேண்டும் என்பதே. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உடலின் வனப்பு என்பதே உடல், மன ஆரோக்கியத்தை உள்ளடக்கியதுதான். இதில் கண்டிப்பாக மூலிகைக்கு என தனிச்சிறப்பான இடம் உண்டு. எனவேதான், மூலிகைப் பற்றியும் yogaaatral.com-ல் பதிவுகள் ஏற்றத் தொடங்கினோம். இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.
கருத்துக் கணிப்பில் பங்கு பெறாதவர்கள் இன்று அல்லது நாளை அதில் கலந்து கொண்டு தங்களின் கருத்தைத் தெரிவிக்கலாம்.
நன்றி.