நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலையும் சமநிலையையும் பாதுகாப்பது இவ்வுலகில் ஒன்றையொன்று சார்ந்து வாழும் உயிரினங்களும் அவற்றின் செயல்பாடுகளும் தான். இந்த நுணுக்கமான இயக்கம் சீராகத் தொடர இயற்கையைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட 2000-ற்கும் மேற்பட்ட ஆய்வுகளின்படி, உல்கம் முழுவதிலும் மனிதர்களின் செயல்பாடுகள் நிறைந்திருக்கும் பகுதிகளில் மற்றைய பகுதிகளை விட, உயிரினங்கள் கிட்டத்தட்ட 20% குறைவாய் உள்ளன. மனிதர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் இந்தப் பேரிழப்பு சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதித்து மகரந்தச் சேர்க்கை, தண்ணீர் சுத்தப்படுத்தப்படுதல் மற்றும் சீரான காலநிலை ஆகிய அனைத்திலும் பெரும் சீர்க்கேட்டை ஏற்படுத்துகிறது.

நம் பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் காடுகள் மாபெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. உலகளவில் மூன்றில் ஒரு பங்கு மர இனங்கள் அழியும் நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் அறிவிக்கின்றன. மரங்களின் அழிவு, அவற்றை வசிப்பிடத்திற்காகவும் உணவிற்காகவும் சார்ந்திருக்கும் பல்வேறு உயிர்களின் அழிவுக்கும் காரணமாகி விடுகிறது. அது மட்டுமல்லாமல், காடுகள் அழிப்பின் காரணமாக பூஞ்சை இனமே பெருமளவில் அழிந்து வருகிறது. மண் வளத்தைப் பெருக்குவதிலும், கழிவுகளை சிதையச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றும் பூஞ்சை அழிவது மிகவும் கவலைத்தரக் கூடியதாக ஆய்வு அறிவிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் நம் பொருளாதாரத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்படும். மனிதனின் உணவு மற்றும் குடிநீர்த் தேவைக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மனித இனத்தைக் காப்பதும் நலமான சுற்றுச்சூழலே.
பல்லுயிர்களின் அழிவு காலநிலை மாற்றம், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான நிலைகளை உருவாக்குவதோடு, மனித நலத்திற்கும் ஆபத்தை அதிகரிக்கும்.
2018-ல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, மனித குலம் 83% வனவிலங்குகளையும் பாதிக்கும் மேற்பட்ட மரம், செடி வகைகளையும் அழித்திருக்கிறது.

நம்முடைய தளத்தின் இந்தப் பகுதியில், அழியும் விளிம்பில் இருக்கும் விலங்குகள், மர வகைகள், சுற்றுச்சூழலுக்குக் கேட்டை உருவாக்கும் ப்ளாஸ்டிக் போன்ற அச்சுறுத்தல்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதவிருக்கிறோம். மேலும், இயற்கையைக் காக்கப் போராடும் தனி நபர்களையும், அமைப்புகளையும் பற்றிய தகவல்களையும் பகிரவிருக்கிறோம். தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்து அனைவரும் இந்த உலகை அற்புதமானதாக நம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
மறிமான் / Antelope
அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது. உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது.