முந்தைய பதிவு ஒன்றில் மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம்.
மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள்
மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றை நீக்கி மனதைப் புத்துணர்வோடு வைத்து மன அமைதியைப் பெற கீழ்க்கண்ட முத்திரைகளைப் பழகி வரவும்.
1) சின் முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
- சுட்டும் விரல் மற்றும் கட்டை விரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
- மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
- 10 முதல் 15 நிமிடங்கள் வரை சின் முத்திரையில் இருக்கவும்.
2) அபானவாயு முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- சுட்டும் விரலை மடக்கி கட்டை விரலின் கீழ் வைக்கவும்.
- இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் நுனிகளையும் கட்டை விரல் நுனியையும் ஒன்றாக வைக்கவும்.
- சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும்.
- ஒரு நாளில் அரை மணி நேரம் இம்முத்திரையைப் பயிலவும். வேளைக்கு 15 நிமிடம் என காலை மற்றும் மாலையில் இம்முத்திரையைப் பழகலாம்.
3) அஞ்சலி முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- இரண்டு உள்ளங்கைகளையும் அனாகத சக்கரத்தின் இருப்பிடமான மார்புக்கு அருகே கொண்டு வரவும்.
- இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வணக்கம் கூறுவது போல் வைக்கவும். இரண்டு கைகளின் முட்டிகளும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
- சிறிது நேரம் இந்த நிலையில் இருக்கவும்.
4) ஆதி முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- கட்டை விரலை மடித்து உள்ளங்கையில் வைக்கவும்.
- மற்றைய நான்கு விரல்களை கட்டை விரலின் மேல் மடித்து வைக்கவும்.
- 15 நிமிடங்கள் இந்த முத்திரையைப் பழகவும்.
5) பிராண முத்திரை
செய்முறை
- முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும். பத்மாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் தொடர்ந்து அமர முடிந்தால் அவ்வாறே அமர்ந்து பழகலாம். அல்லது சுகாசனத்தில் அமரலாம்.
- கைவிரல்களை நீட்டவும்.
- மோதிர விரல் மற்றும் சிறுவிரலின் நுனிகளை பெருவிரலின் நுனியால் தொடவும்.
- மற்ற இரண்டு விரல்களையும் நேராக நீட்டியவாறு வைக்கவும்.
- கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் மனதை வைக்கவும்.
- சீரான சுவாசத்தில் இருக்கவும்.
6) பிருத்வி முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- மோதிர விரல் மற்றும் பெருவிரலின் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
- மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
- இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் பயிலவும்.
- 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.
7) வாயு முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
- சுட்டும் விரலை மடக்கி பெருவிரலின் கீழுள்ள பகுதியில் வைக்கவும்.
- பெருவிரலை மடித்து சுட்டும் விரலின் மேல் வைக்கவும்.
- மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டிக் கொள்ளவும்.
- 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையை பயிலவும்.
8) முஷ்டி முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
- பெருவிரலைத் தவிர மீதமுள்ள நான்கு விரல்களையும் மடக்கிக் கொள்ளவும்.
- பெருவிரலை மடித்த விரல்களில் முதல் மூன்று விரல்கள் மேல் வைக்கவும். அதாவது, பெருவிரல் மோதிர விரலின் மேல் படுமாறு வைக்கவும்.
- வேளைக்கு 15 நிமிடங்களாக மூன்று வேளை முஷ்டி முத்திரை பயிலவும்.
9) சூரிய முத்திரை
செய்முறை
- கை விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
- மோதிர விரலை மடித்து அதன் நுனிப்பகுதியை பெருவிரலின் கீழ் உள்ள மேட்டின் மீது வைக்கவும்.
- பெருவிரலை மடித்து, மடித்து வைத்திருக்கும் மோதிர விரலின் மீது மெதுவான அழுத்தத்தில் வைக்கவும்.
- மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறே வைக்கவும்.
- முத்திரை மீது கவனம் வைக்கவும். சீரான மூச்சில் இருக்கவும்.
குறிப்பு: சுரம், அதிகக் களைப்பு உள்ள நேரங்களில் சூரிய முத்திரையைப் பயில்வதைத் தவிர்ப்பது நல்லது. கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் சூரிய முத்திரையைத் தவிர்ப்பது நல்லது.
மேற்கூறப்பட்டுள்ள மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகளில் எவையேனும் ஒன்றைத் தொடர்ந்து பயின்று வந்தாலே மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.