முந்தைய பதிவு ஒன்றில் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம்.
மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள்
மலச்சிக்கலைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில:
1) சூரிய முத்திரை
சூரிய முத்திரை உடல் சூட்டைக் குறைக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும். மேலும் இது அதிகக் கொழுப்பைக் கரைக்கும் முத்திரை ஆகும்.
சூரிய முத்திரையை காலை, மாலை என இரு வேளை, வேளைக்கு 15 நிமிடம் வரை பயிலலாம். இம்முத்திரையை நடந்து கொண்டும் செய்யலாம். படத்தில் ஒரு கையால் செய்வது போல் காட்டியிருந்தாலும் இரண்டு கைகளாலும் இம்முத்திரையைப் பயில வேண்டும்.
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும்.
- கை விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
- மோதிர விரலை மடித்து அதன் நுனிப்பகுதியை பெருவிரலின் கீழ் உள்ள மேட்டின் மீது வைக்கவும்.
- பெருவிரலை மடித்து, மடித்து வைத்திருக்கும் மோதிர விரலின் மீது மெதுவான அழுத்தத்தில் வைக்கவும்.
- மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறே வைக்கவும்.
- முத்திரை மீது கவனம் வைக்கவும். சீரான மூச்சில் இருக்கவும்.
குறிப்பு
சுரம், அதிகக் களைப்பு உள்ள நேரங்களில் சூரிய முத்திரையைப் பயில்வதைத் தவிர்ப்பது நல்லது. கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் சூரிய முத்திரையைத் தவிர்ப்பது நல்லது.
2) வருண முத்திரை
மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகளில் ஒன்றான வருண முத்திரை நீரிழிவு நோய் போக்கும் முத்திரையாகவும் விளங்குகிறது.
மேலும், வருண முத்திரை உடல் சூட்டைத் தணிக்கவும் சரும வறட்சியைப் போக்கவும் உதவுகிறது.
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும்.
- கை விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
- சிறுவிரல் மற்றும் பெருவிரல் நுனிகளை ஒன்றாக இணைக்கவும்.
- மற்றைய மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
- இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் இந்த முத்திரையைப் பழக வேண்டும்.
- முத்திரை மீது கவனம் வைக்கவும். சீரான சுவாசத்தில் இருக்கவும்.
- 24 நிமிடங்கள் முதல் 48 நிமிடங்கள் வரை செய்யவும். ஒரே வேளையில் செய்ய இயலவில்லை என்றால், இரண்டு அல்லது மூன்று வேளைகளாகப் பிரித்துச் செய்யவும்.
3) அபான முத்திரை
அபான முத்திரை கர்ப்பப்பை கோளாறுகளை இயற்கையான முறையில் தீர்க்க உதவுகிறது. இது கழுத்து வலி போக்கும் முத்திரையாகவும் பயன் தருகிறது.
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும்.
- இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளவும்.
- பெருவிரலை வளைத்து, நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளை பெருவிரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
- சுட்டும் விரல் மற்றும் சிறுவிரலை நீட்டி வைக்கவும்.
- 15 நிமிடங்கள் அபான முத்திரையில் இருக்கவும்.
4) அபான வாயு முத்திரை
மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் வரிசையில் அபான வாயு முத்திரைக்கு முக்கிய இடம் உண்டு. மலச்சிக்கலைப் போக்க அபான வாயு முத்திரையைத் தொடர்ந்து பழகி வர நல்ல பலன் தெரியும்.
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- சுட்டும் விரலை மடக்கி கட்டை விரலின் கீழ் வைக்கவும்.
- இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் நுனிகளையும் கட்டை விரல் நுனியையும் ஒன்றாக வைக்கவும்.
- சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும்.
- ஒரு நாளில் அரை மணி நேரம் இம்முத்திரையைப் பயிலவும். வேளைக்கு 15 நிமிடம் என காலை மற்றும் மாலையில் இம்முத்திரையைப் பழகலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.