தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாயங்களை நாம் அடையும் அதே நேரத்தில் இயற்கையோடு ஒன்றிய வாழ்விலிருந்து பெரும்பாலும் விலகி விடுகிறோம். நம் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள். இதன் தாக்கம் உடல், மன நலத்தில் வெளிப்படுகிறது. உலகளவில் தலைவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. முன்பெல்லாம் அபூர்வமாக இருந்த மைக்ரேன் தலைவலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், இதற்காக மருந்துகளை நாடாமல் வீட்டு மருத்துவத்திலேயே தலைவலியைப் போக்கிக் கொள்ளலாம். இன்று, மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் இயற்கை மருத்துவம் குறித்து பார்க்கலாம்.
ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
தலைவலி எதனால் ஏற்படுகிறது?
தலைவலி ஏற்படப் பொதுவான காரணங்களில் சில:
- அசீரணக் கோளாறுகள்
- சமச்சீரற்ற உணவு மற்றும் நேரம் தப்பிய உணவு
- தூக்கமின்மை
- கழுத்து வலி மற்றும் தோள் வலி
- ஹார்மோன் கோளாறுகள்
- சத்து குறைபாடுகள்
- மன அழுத்தம்
- சில உடல் நலக் கோளாறுகள்
தலைவலியைப் போக்கும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்
தலைவலியைப் போக்கும் வீட்டு மருத்துவத்தில் சில:
1) இஞ்சி
இஞ்சி அசீரணக் கோளாறுகளைப் போக்கும் ஆற்றல் கொண்டது. மைக்ரேன் தலைவலிக்கான மாத்திரை ஒன்றின் திறனோடு இஞ்சியின் திறனை ஒப்பிட்டு செய்யப்பட்ட ஆய்வில் இஞ்சியின் திறன் மாத்திரையின் திறனுக்கு நிகராக இருப்பது நிரூபிக்கப்பட்டதோடு இஞ்சியின் பக்கவிளைவுகள் மாத்திரையின் பக்கவிளைவுகளோடு மிகக் குறைவானது என்பதும் நிரூபணமாகியுள்ளது. மேலும் தலைவலியின் போது ஏற்படக் கூடிய குமட்டல் மற்றும் வாந்தியைப் போக்கவும் இஞ்சி உதவுகிறது. இஞ்சி, வயிற்று உப்புசத்தையும் போக்குகிறது.
ஒரு அங்குல அளவிற்கு இஞ்சியை எடுத்து, மண் போக நீரில் அலசி, தோலை சீவவும். ஒரு கோப்பை நீரில், இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயைக் குறைத்து மேலும் சிறிது கொதிக்க விடவும். தீயை அணைத்து, வடிகட்டி பருகவும். தேவையெனில் சிறிது தேன் சேர்க்கலாம்.
தோல் நீக்கிய இஞ்சியை அரைத்து தலையில் வலி உள்ள இடங்களில் பற்றுப் போடவும். இதனால் சருமத்தில் சற்று எரிச்சல் ஏற்படலாம்.
இஞ்சியை சாறெடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சவும். இந்தக் கலவையை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வரவும்.
2) கிராம்பு
கிராம்பில் இருக்கும் eugenol, வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கிராம்பு செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், அசீரணக் கோளாறு ஆகியவற்றைப் போக்குவதால், செரிமானக் கோளாறால் ஏற்படும் தலைவலி நீங்குகிறது.
ஒரு மேசைக்கரண்டி அளவு கிராம்பை எடுத்து சற்று பொடித்துக் கொள்ளவும். ஒரு கோப்பைத் தண்ணீரில், பொடித்த கிராம்பைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தீயைக் குறைத்து மேலும் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். வடிகட்டி பருகவும்.
சில கிராம்புகளை சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்து தலைவலி உள்ள இடங்களில் பற்று போடலாம்.
3) தும்பைப் பூ
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்கள் தீர்க்க தும்பைப் பூ பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மைக்ரேனைப் போக்கும் தும்பைப் பூவின் திறன் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கையளவு தும்பைப் பூக்களை எடுத்து நன்றாக சுத்தம் செய்து நொறுக்கிக் கொள்ளவும். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள், வலி உள்ள பகுதிக்கு எதிர் பகுதியில் உள்ள மூக்குத் துவாரம் மூலமாக நொறுக்கிய தும்பைப் பூக்களின் வாசனையை முகரவும். தும்பைப் பூவின் சாறெடுத்து மூக்கில் இரண்டு சொட்டு விட நீர்க் கோத்துக் கொண்டதால் வரும் தலைவலி நீங்கும்.
தும்பைப் பூக்களுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடவும்.
தும்பைப் பூ, இலை ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மைக்ரேன் குணமாகும்.
4) சுக்கு
சுக்கு அசீரணம் மற்றும் சளியைப் போக்கும் தன்மை கொண்டதால், இவற்றின் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு அருமருந்தாகிறது.
சுக்குப் பொடியை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து வலி உள்ள இடத்தில் பற்றுப் போடவும்.
வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி சுக்குப் பொடியைக் கலந்து குடிக்கவும்.
அரை தேக்கரண்டி சுக்குப் பொடியுடன் சிறிது வெல்லம் சேர்த்து உண்ணவும்.
5) மஞ்சள்
மஞ்சளில் உள்ள anti-inflammatory மற்றும் antioxidant தன்மைகள் மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது. மஞ்சளுடன் மிளகை சேர்த்து எடுப்பது கூடுதல் பலன் அளிக்கும். மிளகில் உள்ள piperine என்னும் கூறு, மஞ்சளில் உள்ள curcumin-ஓடு சேரும் போது உடல் curcumin-ஐ கிரகிக்கும் அளவு (bioavailability) 2000% அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஒரு கோப்பை பாலில்1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும். பால் காய்ந்ததும் தீயைக் குறைத்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இறக்கி, பதமான சூட்டில் பருகவும்.
தினசரி உணவில் மஞ்சள் தூளைத் தொடர்ந்து சேர்த்து வரவும்.
6) பெருங்காயம்
பெருங்காயத்தின் anti-inflammatory மற்றும் antioxidant தன்மைகளின் காரணமாக தலைவலிக்கான நிவாரணமாக செயல்படுகிறது. மேலும் பெருங்காயம் வாயுத் தொல்லை மற்றும் அசீரணத்தைப் போக்குவதால், இவற்றின் காரணமாக ஏற்படும் தலைவலியைப் போக்க உதவுகிறது.
ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சூடான தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகவும்.
அரைத் தேக்கரண்டி அளவில் பெருங்காயம், கற்பூரம், சுக்குப் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி வால் மிளகு ஆகியவற்றை சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலைவலி உள்ள பகுதியில் பூசவும்.
7) கடுகு
கடுகில் இருக்கும் magnesium நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. ஆய்வு மூலம் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பலருக்கும் magnesium குறைப்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதோடு magnesium அளவுகளை அதிகரிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளின் தாக்கம் குறைவதும் தெரிய வந்துள்ளது.
கடுகை மைய அரைத்து தலைவலி உள்ள இடத்தில் பற்றுப் போடவும்.
கடுகை தினசரி உணவில் சேர்த்து வருவதும் மிக அவசியம்.
8) தனியா
தனியா அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. தனியா விதையின் சிரப் ஒற்றைத் தலைவலியைப் போக்குவது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஆவி பிடிக்கத் தேவையான அளவு தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கொத்துமல்லி விதைகளைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும், அடுப்பை அணைத்து விட்டு, இத்தண்ணீரில் ஆவி பிடிக்கவும்.
ஒரு கோப்பைத் தண்ணீரில் ஒரு மேசைக்கரண்டி கொத்துமல்லி விதைகளைச் சற்றுப் பொடித்து சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், வடிகட்டிப் பருகவும்.
9) துளசி
துளசி அபாரமான மருத்துவ குணங்களைக் கொண்டது. துளசிக்கு சளியைக் கரைக்கும் தன்மை மற்றும் வலி போக்கும் தன்மைகள் உள்ளதால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
சுமார் 10 துளசி இலைகளை நன்றாகக் கழுவி ஒரு கோப்பைத் தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தீயைச் சிறிதாக்கி மேலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி பருகவும். தேவையெனில் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
துளசி இலைகளைப் பறித்து, சாறெடுத்து இரண்டு சொட்டு சாற்றினை இரண்டு மூக்குத் துவாரங்களில் ஊற்றவும். இதை காலை உணவுக்கு முன் செய்யவும்.
துளசியின் பலன்கள் மற்றும் துளசி உணவுகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) அருகம்புல்
அருகம்புல் அபாரமான மருத்துவ குணங்களைக் கொண்டது. தலைவலி மலச்சிக்கல், தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களைப் போக்க உதவும் அருகம்புல் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி அளவு அருகம்புல்லை எடுத்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சாறெடுக்கவும். அத்துடன் சம அளவில் எலுமிச்சை சாறு கலந்து தலைவலி உள்ள இடத்தில் பூசவும்.
கைப்பிடி அளவு அருகம்புல்லைச் சுத்தம் செய்து ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைக்கவும். 1/4 கோப்பையாக சுண்டியதும் வடிகட்டி சிறிது வெல்லம் அல்லது தேன் சர்க்கரை சேர்த்துப் பருகவும். தொடர்ந்து தலைவலியால் அவதிப்படுபவர்கள் வாரம் இரு முறை இவ்வாறு பருகலாம்.
11) சாதிக்காய்
சாதிக்காய் anti-inflammatory மற்றும் antioxidant தன்மைகள் கொண்டது. தலைவலிக்கான பூச்சாக இது காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சாதிக்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடவும்.
12) சந்தனம்
சந்தனம் anti-inflammatory மற்றும் antioxidant தன்மைகள் கொண்டது. சந்தனம் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றலும் கொண்டதால் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலிக்கும் நல்ல தீர்வாகிறது.
சந்தனத்தைக் குழைத்து நெற்றியில் பூசவும். சந்தனப்பொடியைப் பயன்படுத்துவதாக இருந்தால், சந்தனப்பொடியைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழைத்து நெற்றியில் பூசவும்.
ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகளைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேலும் சில குறிப்புகள்
ஒத்தடம்: சுடுநீர் ஒத்தடம் வைக்கவும். சுடுநீர் ஒத்தடம் சிலருக்குத் தலைவலியை அதிகமாக்கக் கூடும். அவ்வாறெனின் ice ஒத்தடம் வைக்கலாம்.
ஒத்தடம் வைக்கும் போது தலை, பின் கழுத்து, தோள், மேல் முதுகு ஆகிய பகுதிகளில் ஒத்தடம் வைக்கவும்.
சுடுநீரில் பாதங்களை வைத்தல்: சுடுநீரில் பாதங்களை வைப்பதும் நல்ல பலனைத் தரும். ஒரு கைப்பிடி கல் உப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். பொறுத்துக் கொள்ளும் சூட்டில் உள்ள தண்ணீரில் பாதங்களை வைக்கவும். தேவையெனில் எண்ணெய் பூசி மசாஜ் செய்து பாதங்களை வைக்கலாம்.
உணவு: சமச்சீரான உணவை சரியான நேரத்தின் உண்ணுவது பெரும்பாலானவர்களின் தலைவலியைத் தவிர்க்க உதவும். இரத்தக் குறைப்பாடு காரணமாகவும் தலைவலி ஏற்படும் என்பதால் இரும்புச் சத்து உள்ள உணவுகளை நிச்சயம் சேர்க்க வேண்டும். அவ்வாறே magnesium நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். செரிமானப் பிரச்சினைகளால் உண்டாகும் தலைவலியைத் தவிர்க்க சத்தான உணவை சரியான நேரத்தில் உண்ணுவதோடு நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.
தூக்கம்: இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது உடல் மற்றும் மன நலத்துக்கு இன்றியமையாதது. ஆறு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வரை இரவு உறங்க வேண்டும். பீனியல் சுரப்பி சுரக்கும் melatonin, ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் குறைவாக சுரப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் melatonin அளவுகளை அதிகரிப்பதனால் தலைவலி நீங்குவதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆக, இரவில் அதிக நேரம் கண்விழிக்காமல் நேரத்துக்கு உறங்குவது தலைவலியைப் போக்குவதோடு தவிர்க்கவும் உதவுகிறது.
உடற்பயிற்சி: உடற்பயிற்சியின் பலன்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரிமானம் மேம்படுகிறது, இரத்த ஓட்டம் சீராகிறது, கழுத்து, தோள் தசைகள் பலமடைவதால் கழுத்து வலியால் ஏற்படும் தலைவலி தவிர்க்கப்படுகிறது. மேலும், உடற்பயிற்சி செய்யும் போது, உடலின் இயற்கையான வலி நீக்கிகளான endorphin-கள் சுரக்கப்படுவதால் தலைவலியின் தீவிரமும் தலைவலி அடிக்கடி ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றன. உடற்பயிற்சி மன அழுத்தத்தைப் போக்குவதால் மன அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலியும் தவிர்க்கப்படுகிறது.
மன அழுத்தம்: மன அழுத்தம் தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. தொடர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் அவசியம் யோகா, தாய்ச்சி அல்லது வேறு சில உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவையும் மன அழுத்தத்தைப் போக்க உதவும். மன அழுத்தத்தைப் போக்க, பிடித்தமான பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தலாம்.
மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனம் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
நடைப்பயிற்சியின் நன்மைகள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
இருமலைப் போக்கும் இயற்கை மருத்துவம்
இருமல், நுரையீரலின் பாதைகளைச் சுத்தம் செய்யவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உடல் பயன்படுத்தும் ஒரு தற்காப்பு முறை. இருமல், சளியுடன் அல்லது சளி இல்லாத வறட்டு இருமலாக வரலாம். எவ்வாறெனினும், வீட்டு மருத்துவத்தைப்
சளியைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்
‘சும்மா விட்டால் ஒரு வாரத்தில் போகும்; மருந்து சாப்பிட்டால் ஏழு நாளில் போகும்’ என்று சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிய சளிப் பிரச்சினை இன்று கொரோனாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாதாரண சளியைப் போக்க
2 Responses
அருமையான பதிவு! மிகவும் உபயோகமான குறிப்புக்கள்!
மிக்க நன்றி.