வட மொழியில் மர்ஜரி என்றால் பூனை என்று பொருள். அதாவது பூனை, உடலை நீட்டி சோம்பல் முறுக்குவது போன்ற நிலை இந்த நிலை.
எளிதாக இருந்தாலும் இதன் நன்மைகள் பெரியவை. உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும். மனதை ஒரு நிலைப்படுத்த உதவும். மனதின் ஆற்றலை மேம்படுத்தும். மன இறுக்கத்தை அகற்றும்.
உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறினால்தான் மேற் சொன்ன நன்மைகள் நடக்கும். இதற்கு சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய வேண்டும். மேலும், அட்ரீனல் சுரப்பி சிறப்பாக சுரந்தால்தான் மன இறுக்கம் தளரும். உடலின் நோய் எதிர்ப்புத் திறன் கூடும். உடலை உற்சாகப்படுத்தும். சிறுநீரகமும், அதனோடு சேர்ந்த அட்ரீனல் சுரப்பியும் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதால் தூண்டப்படுகிறது. மிகவும் சோர்வாக (உடல் அல்லது மனம்) இருக்கும் போது, இதைச் செய்து பாருங்கள்; உடனடியாக உற்சாகமான மனநிலை வந்து விடும்.
சரி, இதற்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்? பூனை, நீண்ட நேரம் தூங்கியோ அல்லது மந்தமாகவோ இருந்தால் இது போல் உடலை நீட்டி தளர்த்திக் கொள்ளுமாம். உடனடியாக அதன் தசைகளுக்கு இரத்தம் பாய்ச்சப்பட்டு அடுத்த தாவலுக்குத் தயாராகி விடுகிறது. அது மட்டுமல்ல, இது போல் நீட்டுதலால் (stretching) அதன் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு புத்துணர்வு பெறுகிறது. அந்த நிலையை ஆசனமாக நாம் செய்யும்போது நமக்கும் அந்த பலன்கள் கிடைப்பதால், நம்மையும் பூனையை போல் இருக்கச் சொல்கிறது யோகக் கலை. புத்துணர்வு தரும் பூனை நிலைக்கு மாற்று ஆசனத்தை நாளை பார்ப்போம்.
மர்ஜரியாசனத்தின் மேலும் சில பலன்கள்
- முதுகெலும்பையும் முதுகுத் தசைகளையும் பலப்படுத்துகின்றது.
- இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
- வயிற்று உள் உறுப்புகளை பலப்படுத்துகிறது.
- மனதை அமைதிப்படுத்துகிறது.
செய்முறை
மர்ஜரியாசனத்தை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
- விரிப்பில் தவழும் நிலையில் இருக்கவும். உங்கள் மணிக்கட்டு உங்கள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
- மூச்சை வெளியேற்றியவாறே வயிற்றை உள்ளிழுத்து முதுகை முடிந்தவரை மேல் நோக்கி உயர்த்தவும்.
- தலையைத் தொங்க விடவும்.
- சில நொடிகள் இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு
பொதுவாக மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் ஆகிய இரண்டையும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். நாளை நாம் பிடிலாசனம் பற்றி பார்ப்போம்.
கீழே வைப்பதால் கால் முட்டி வலித்தால், முட்டிக்கடியில் ஏதேனும் மென்மையான விரிப்பை மடித்து வைக்கவும்.
மணிக்கட்டு மற்றும் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் மற்றும் தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தை நேராக வைத்துப் பயிலவும்.