உடல் மன ஆரோக்கியம்

பயணப் பதிவுகள் – ஒரு துவக்கம்

ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் வனப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஊர் சுற்றுதல், அதாவது, பயணம் என்பது ஆதி மனிதன் காலம்தொட்டே வாழ்வின், உயிர் வாழ்தலில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.

ஆதி மனிதன், குழுக்களாகப் பிரிந்து பலதரப்பட்ட இன்னல்களைக் கடந்து பூமிப் பந்தின் பல்வேறு பகுதிகளிலும் மனித உயிர்களை விதைத்தான். உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற காரணங்களால் வசித்து வந்த இடம் வாழத் தகுதியற்றதாகிப் போகும் போது ஆதி மனிதன் வளங்கள் தேடி இடம் பெயர்ந்தான். ஆக, ஆதி மனிதனின் பயணங்களுக்கு அடிப்படையான காரணம் உயிர் பிழைத்திருத்தல்.

விவசாயம் செய்யத் தொடங்கிய பின்னரே மனிதன் குறிப்பிட்ட இடத்தில் வாழத் தொடங்கி, அவனின் மண், அவனின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை என தன் இனத்துக்கான அடையாளங்களைத் தன் மண்ணோடு ஐக்கியப்படுத்திக் கொண்டான்.

ஆதி மனிதனின் வாழ்க்கை சவால்கள் நிறைந்தவை. எதை விட்டுப் போகிறோம், எதைத் தேடிப் போகிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவர்கள் நாடுவது எங்குக் கிடைக்கும் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருக்காது; கடந்து செல்லும் பாதைகளில் எத்தகைய ஆபத்துகள் காத்திருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பயணத்தை, இடப் பெயர்வை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பயணமே அவர்கள் பார்வையை விசாலமாக்கியது; அவர்களின் அறிவை வளர்த்தது; அவர்களின் உயிர்களைத் தக்க வைக்கவும், இனங்களைப் பலப்படுத்தவும் வைத்தது.

ஆதி மனிதன் தொடங்கிய பயணத்துக்கான தேவை, கால ஓட்டத்தில் வேறு பரிமாணங்களை அடைந்து இன்றளவும் பயணம் என்பது மனிதனின் தேவையாக, அவன் ஆன்மாவின் இருத்தலுக்கானதாக இருந்து வருகிறது.

பயணம் எப்படி மனிதனின் அவசியமாகிறது?

ஏட்டுப் படிப்புக் கற்றுத் தராததையும் பயணம் கற்றுத் தரும். பள்ளிக் கூடப் பாடத்தில் உலக வரைப்படங்களையும், நாடுகளையும், அதன் தலைநகரங்களையும், மாபெரும் சமுத்திரங்களையும், உயர்ந்த மலைகளையும், பனிப் பிரதேசங்களையும் பற்றி நாம் ஏராளமாகப் படித்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு விடுமுறைக்கும் பாட்டி, தாத்தாவின் ஊர் என்பதால் ஒரே ஊருக்கே திரும்பத் திரும்பப் போய் வந்திருந்தாலும் அந்தப் பயணத்தை பின்னாளில் எப்பொழுது யோசித்துப் பார்த்தாலும் மனதை நிறைக்கும் நினைவுகள் ஏராளம்.

அதே ஊரின், அதே வீட்டின் அதே திண்ணை, அதே மரங்கள் மேலும் உயரமாக, அதே நண்பர்கள் மேலும் வளர்ந்தவர்களாக, அதே மாந்தோப்பு, அதே பூங்கா, பழசாகிப் போன கிரிக்கெட் மட்டையும் அதை விடப் பழமையான பந்தும், மழைத் தண்ணீரில் விடும் காகிதக் கப்பலும், உண்டி வில்லும், கில்லியும், பாண்டி ஆட்டமும், உணவு நேரத்தில் கூடி உண்ணுதலும், அண்ணாந்து படுத்து வானத்து நட்சத்திரத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கி ஒவ்வொரு முறையும் எண்ணி முடிக்காமல் தூங்குவதும், சூரியக் கதிர்களால் தூக்கம் கலைவதும், அவ்வப்போது நண்பர்களோடு சிறு சிறு பூசலுமாக, அந்த நினைவுகள் கொடுக்கும் நிறைவைப் பள்ளிக்கூட அறிவு கொடுக்காது.

இவற்றிற்கெல்லாம் அடிப்படை, பழகிய வேறு ஊராயிருந்தாலும் நமது நடைமுறை வாழ்வின் தினசரி வேலைகளிலிருந்து தற்காலிக மாற்றமாக எடுக்கும் விடுப்பு நமது சிந்தனையை விசாலமாக்குகிறது; புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது; உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மீண்டும் நம் வேலைகளுக்குத் திரும்புவதற்குத் தேவையான ஆற்றலையும் ஆன்ம பலத்தையும் அளிக்கிறது. இதுவே பழகாத புதிய புதிய ஊர்களுக்குச் செல்லும் பொழுதும், புதிய அனுபவங்களைச் சந்திக்கும் பொழுதும் எப்படி உணர்வோம்? அது எப்பேற்பட்ட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருவதாக இருக்கும்? எவ்வளவு சிறந்த பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்!

பயணம் செய்வதால் ஏற்படும் மேலும் சில முக்கிய நன்மைகள்

பயணம் என்பது நாம் சென்று சேரும் இடம் பற்றியது மட்டுமல்ல. இருள் விலகும் முன் வீட்டிலிருந்து பயணத்தைத் துவக்கி, காலை நேர வானத்தில் மெல்லப் பரவும் சூரிய ஒளியையும், அதைத் தொடரும் சூரிய உதயத்தையும் கண்டு இரசிப்பது, காலைச் சிற்றுண்டிக்காக வழியில் உணவகம் தென்படுகிறதா என்று பார்ப்பது (அல்லது app-ல் தேடுவது), குறிப்பிட்ட தொலைவு பயணம் செய்த பின் தேநீர் கடையில் ஆவி பறக்கும் தேநீருக்காக வண்டியை நிறுத்துவது, காதுக்கு இதமான ஓசையில் பாடல்களை ஓட விட்டுப் பேசிக் கொண்டே பயணிப்பது, அவ்வப்போது தென்படும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வது என இவை அனைத்தும் பயணத்தின் உயிர்நாடி.

அதே போலத்தான் இரயில் மற்றும் பேருந்து பயணங்களும் நம் மனதை ஆக்கிரமிக்கின்றன. இரயிலின் தடதட ஓசையும், அதன் அன்னை மடி தாலாட்டு போன்ற அசைவும், ஜன்னல் வழியே வேகமாக மறையும் காட்சிகளும், கணீர் குரலில் தேநீர் விற்பவர்களும், அவ்வப்போது வரும் உணவு விற்பனையாளர்களும் அதற்கு முன்னரே தூக்கும் வாசனையும் என இரயில் பயணம் ஒரு சுகமான அனுபவம். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் கம்பீரமாக இரயில் உள்ளே நுழைந்த பின் பரபரப்போடு வண்டி ஏறுபவர்கள், அவர்களுக்கு விடைகொடுக்க வருபவர்கள், அந்த நிலையங்களில் இருக்கும் பத்திரிக்கை மற்றும் தேநீர்க் கடை என அனைத்தும் நம் கவனத்தை ஈர்க்கும். மெல்ல அருகிலிருப்பவர்களுடன் அறிமுகமாகி பயணம் முழுவதும் சுவாரசியமான உரையாடல்கள் என இரயில் பயணங்களில் நேரம் போவதே தெரியாது.

பேருந்து பயணம் வேறு இரகம். தேசிய நெடுஞ்சாலையிலிருந்து  ஊருக்குள் பேருந்து செல்லும் போது அந்த ஊரோடு சில நிமிடங்கள் நம்மை அறியாமலே நம் மனம் ஐக்கியமாகும். நெடுஞ்சாலை முழுவதிலும் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பேருந்து ஊருக்குள் நுழைந்ததும் வேகத்தை மட்டுப்படுத்தும்; ஆனால், நம் மனம் வேகம் எடுக்கும். அந்த ஊரின் சந்தை, பேருந்து நிலையம் அருகில் இருக்கும் இனிப்புக் கடை, டீக்கடை வாசலில் தினசரியுடன் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது,  எல்லாமே நமக்குள் ஒரு மகிழ்வான உணர்வைக் கொடுக்கும். பேருந்து பயணத்தின் கூடுதல் சுவாரசியமே இதுதான். நாம் செல்ல வேண்டிய ஊருக்குச் சென்று சேர்வதற்குள் பல்வேறு ஊர்களுக்குள்ளும் நுழைந்து வந்திருப்போம். பேருந்துப் பயணம் ஒரு வகையில் நம் பயணத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்கிறது.

பயணத்தை அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பல்வேறு இடங்களைப் பார்த்து இரசிப்பதற்கான பயணம், இயற்கையோடு ஐக்கியமாகி உறவாடும் பயணம் மற்றும் சாகசப் பயணம். இயற்கையை இரசிக்கப் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஒரு ஊரில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்து இரசிப்பதில் நிறைவு பெறுவார்கள். இயற்கையோடு ஐக்கியமாகி உறவாடும் பயணத்தில் ஆர்வமுள்ளவர்கள் மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். சாகசப் பயணம் செல்பவர்களுக்கு ஆபத்து என்கிற ஒரு அம்சமே பயணத்தில் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். இதில் எந்த வகைப் பயணமாக இருந்தாலும் சில நன்மைகள் பொதுவானவை.

பயணம் செய்வதால் ஏற்படும் முக்கிய நன்மைகளில் சில இதோ:

அறிவு மேம்படுதல்

பல்வேறு ஊர்கள், நாடுகள், மொழிகள் பற்றிய அறிவும் பல்வேறு கலாச்சாரங்களை அறிய முடிதலும் பயணத்தில் சாத்தியப்படுகின்றன. பயணத்தின் ஊடாக நாம் சந்திக்கும் சவால்கள் நம்முள் இருக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றலை வளர்க்கிறது.  பயணத்துக்கான திட்டமிடல் தொடங்கி வீடு திரும்பும் வரையிலும் பயணம் எண்ணற்ற அனுபவங்களை அள்ளித் தருகிறது. அனுபவத்தை விட சிறந்த பாடமாக எது இருக்க முடியும்?

உடல் நலம் முன்னேறுதல்

நம் மனம் பயணம் தொடர்பான மேற்கூறிய அனுபவங்களை வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே மனம் எதிர்பார்த்துத் தயாராகி விடுவதால் பல்வேறு இடங்களில் பல்வேறு வகை உணவுகள் உண்ணும் போது உடலை அதற்கேற்றாற்போல் தகவமைத்துக் கொள்ள வைக்கிறது; இதன் விளைவாக இயல்பாகவே நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகள் கூட பயணத்தின் போது ஒத்துக் கொள்ள வைப்பது இந்த மகிழ்ச்சியான மனநிலையே.

மேலும், பயணத்தின் போது நடத்தல், மலை ஏறுதல் உள்ளிட்ட உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஈடுபடுவதால் இருதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு மேம்படுகின்றன. பயணத்தினால் ஏற்படும் மன மகிழ்ச்சி நேர்மறையான எண்ணங்களை விதைப்பதால் உடலிலும் நேர்மறை விளைவுகளை அனுபவிக்கலாம்.

மன நலம் மேம்படுதல்

பயணம் மனதுக்கு மகிழ்ச்சி தருவதால் மன அழுத்தம் விலகுகிறது. பயணம் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் குறும்புத்தனத்தை, குழந்தைத்தனத்தைத் தூண்டி வேடிக்கை நிறைந்த நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கிறது. இதனால் கவலைகள் மறந்து மனதில் உற்சாகம் நிறைகிறது.

மனம் விசாலமாதல்

ஊர் சுற்றிப் பார்ப்பது நம் மனதை விசாலமடைய வைக்கிறது. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை நாம் பயணத்தில் பல முறை உணரும் வாய்ப்பு நேரிடும். இப்பிரபஞ்சப் பேராற்றல் முன் அனைத்து மனிதர்களும் சமம் என்பதை உணர்வதோடு ஜாதி, மதம், நாடு போன்ற தடைகளைக் கடந்து மனிதர்களை மதிக்கும் பண்பும் மிகும். இதனால் செறிவான முறையில் பல்வேறு கலாச்சாரங்களோடும் மொழிகளோடும் தொடர்புப்படுத்திக் கொள்ள இயலும்.

தன்னம்பிக்கை வளர்தல்

பயணம் நம் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. புதிய இடங்களில், புதிய மனிதர்களிடம், சில நேரங்களில் புரியாத மொழியில் பேச வேண்டி வரும்போது அச்சம், தயக்கம் தவிர்த்துப் பழகும் போது தன்னம்பிக்கை கூடுகிறது. பயணத்தின் போது ஏற்படும் திட்டமிடா நிகழ்வுகளில் திறம்படக் கையாளும் போது தன்னம்பிக்கை கூடுகிறது. பயணத்தின் போது புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுதலும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

ஆளுமை பெருகுதல்

பயணம் ஆளுமையை வளர்க்கிறது. முன்பின் அறியாத நபர்கள் நிறைந்திருக்கும் ஊர்களில் கலந்து பழக நேரும் போது பிறர் மீது நம்பிக்கை வைக்கும் பண்பு வளர்கிறது. பயணத்தில் புதிய சூழல்களில் ஏற்படும் தயக்கமும் பயமும் நீங்கி தெளிவான மனதோடு எதையும் கையாள முடிகிறது. புதிய மனிதர்களோடு தயக்கமின்றிப் பழக முடிகிறது. தொடர்பாடல் திறன் மேம்படுகிறது. திறந்த மனதோடு எதையும் அணுகும் தன்மை வளர்கிறது.

இவற்றைத் தவிர பயணம் நம்மை சுயமதிப்பீடு செய்ய வைக்கிறது. நம் மன நிலை, சிந்தனைப் போக்கு இவற்றை மறு ஆய்வு செய்யும் வாய்ப்பையும் பயணம் அளிக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய புதிய கோணங்களை நம் முன் நிறுத்தியும் நமது எல்லைகளை விரிவாக்கியும், நம்முள் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்க்கிறது.

பொருள்மயமான இவ்வுலகில் எந்த பொருளும் நிரந்தரமாகத் தர முடியாத மகிழ்ச்சியை, நம் வாழ்வில் நாம் செய்த பயணங்களின் நினைவுகளும் கற்றுக் கொண்ட அனுபவங்களும் தரும்.

வாழ்க்கைக்கான பொருளாதாரம் என்பது காலச் சூழலில் மாறி பொருளாதாரத்துக்காக வாழ்தல் என்று ஆகிப் போனது. இதன் விளைவாக, பொருள் ஈட்டுதல் பிரதானமாகிப் போனதால், பொருள் சார்ந்தே வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாய் இருக்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்று அமைத்துக் கொண்டு வாழ்ந்த காலத்தில் உறவுகளும், மனிதமும் முதன்மையாக இருந்தன. வாழ்க்கை, இயற்கையோடு இணைந்தும் பிணைந்தும் மண்ணை நேசித்தும் சக மனிதர்களுக்கு நேரம் ஒதுக்கியும் உறவாடியும் வாழ முடிந்தது. ஆனால், பொருள் ஈட்டுதலுக்கே முதலிடம் என்றாகிப் போன வாழ்க்கையில் யாருக்கும் எவருக்காகவும் நேரம் ஒதுக்க முடியவில்லை. வாழ்க்கையை பொருள்களால் நிரப்பி அவற்றோடு உறவாடி அதில் மகிழ்ச்சியைப் பெற முயற்சிக்கிறோம். ஆனால் வாழ்க்கையை அனுபவித்து வாழ முடிவதில்லை.

பயணம் நம் நடைமுறை வாழ்க்கையிலிருந்து மாற்றம் தருகிறது; நமக்கான இலக்கை தீர்மானித்து அந்த இலக்கை அடைவதற்கான வழிகளில் மனதை இலயிக்க வைக்கிறது. பயணம் மனதை விசாலமாக்குவதால், இயல்பாகவே பயணம் செல்லும் ஊர்களில் சந்திக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டவும், நம்பிக்கை வைக்கவும், சில மகிழ்வான தருணங்களை அனுபவிக்கவும் முடிகிறது. இயற்கையை இரசித்து அனுபவிக்கவும் அதனோடு ஒன்றவும் முடிகிறது. இந்த காரணங்களால்தான் நாம் பயணத்தை விரும்புகிறோம்.

ஆக, பயணம் என்பது வெறும் ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது அல்ல. பயணம் ஆன்ம ஊக்கத்தைப் பெருக்கி உடலையும் மனதையும் வனப்பாக்குவது. பயணம் நம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது; நமது சிந்தனையை செழுமைப்படுத்தி நம்மை வனப்புடன் வைத்திருக்கிறது. அகத்தின் அழகுதானே முகத்திலும்.

ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவம்

ஒவ்வொரு பயணமும் ஒரு சுவாரசியம்

ஒவ்வொரு பயணமும் ஒரு கல்வி

ஒவ்வொரு பயணமும் ஒரு துவக்கம்

ஒவ்வொரு பயணமும் ஒரு தேடலின் விடை

ஒவ்வொரு பயணமும் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம்.

வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டாம்; வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுவோம்; பக்கத்து ஊராக இருந்தாலும் பயணத்துக்கான துவக்கத்தைச் செய்வோம்.

இந்தப் பகுதியில் சென்னைத் தொடங்கி பல்வேறு ஊர்களிலும் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும்.

சில ஆலோசனைகளைப் பகிர்ந்து இப்பதிவுக்கு வலு சேர்த்த என் கணவர் தமிழரசுக்கு என் நன்றி.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்