உடல் மன ஆரோக்கியம்

வெட்டவெளியில் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மொட்டை மாடி பயிற்சி பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது போலிருக்கிறது. சென்ற வருடக் கொரோனா லாக்டவுனில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த இடம் பெரும்பாலான வீடுகளின் மொட்டைமாடிகள்தான். காலம் காலமாக பெண்கள் வேலை செய்வதற்கான இன்னொரு தளம் போல துணி உலர்த்தவும் வடாம் காய வைக்கவும், திடீரென்று மழை பெய்தால் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள இடம் போல அவர்கள் மட்டுமே (வீட்டு வேலைகளில் சமபங்கு எடுக்கும் ஆண்கள் பொறுத்துக் கொள்ளவும்) படிகளை இரண்டிரண்டாகத் தாவி மழையிலிருந்து துணிகளைப் பாதுகாத்து எடுப்பதுமாக பயன்படுத்தப்பட்ட மொட்டை மாடி வேறு அவதாரம் எடுத்தது கொரோனா லாக்டவுனின் போதுதான்.

கொரோனா லாக்டவுன் காலக்கட்டத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் பெண், ஆண் என இருபாலரும் நடைப்பயிற்சி செய்வதில் தொடங்கி, மாடித் தோட்டம் போடுவது, இரவு நேர நிலா ஒளியில் குடும்பம் குடும்பமாகக் கூடி கவலைகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்வது, பழைய பாடல்களைக் கேட்பது என மொட்டை மாடியின் பயன்பாட்டு எல்லை விரிவடைந்தது. இதையும் விட ஆண்கள் துணி உலர்த்துவதும் இயல்பான காட்சியானது.

இப்பொழுது ஏன் பழைய கதை என்று கேட்கிறீர்களா? ஏனென்றால் இப்பொழுது பெரும்பாலான மொட்டை மாடிகள் மீண்டும் அமைதியாகி, தான் மட்டுமே உதய சூரியனின் ஒளியில் நனைந்தும் உச்சி சூரியனில் காய்ந்தும் நிலவு ஒளியில் பிரகாசமாகியும் என தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.

ஆனாலும் மொட்டை மாடியில் இரசித்துப் பயிற்சி செய்தவர்களால் அதை விட முடியாதுதான். அவர்களை சில அழகான விடியல்களும் சும்மா விடுவதில்லை. அம்மாதிரியான ஒரு நாள்தான் நேற்றைய முன் தினம் (பதிவிட இன்றுதான் நேரம் கிடைத்தது).

காலைப் பயிற்சியின் போது சூரிய உதய நேரத்தில் மேகங்கள் அணிவகுப்பைக் கண்ட நொடி, மனம், “இன்று நமது கண்ணுக்கும் மனதிற்கும் விருந்துதான்” என எண்ணியது. ஆனாலும் பயிற்சியை இடை நிறுத்தவும் விருப்பமில்லை. அழகான நொடிகளை படம் பிடிக்காமல் விடவும் மனதில்லை. இதோ உங்களுக்காக:

அதற்கு முன்னர், மொட்டை மாடி போன்ற திறந்தவெளிகளில் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்:

  • தூய காற்றை சுவாசிக்க முடிகிறது.
  • தூய காற்று நுரையீரலை வலுப்படுத்துகிறது.
  • திறந்த வெளியில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி பயிற்சி செய்வதால் தூக்கமின்மை கோளாறு நீங்குகிறது.
  • சுத்தமான காற்றை சுவாசிப்பதால் இரத்தத்தில் பிராணவாயு அளவு அதிகரிக்கிறது; இதனால் மூளைத்திறனும் மேம்படுகிறது.
  • நோய் எதிர்க்கும் ஆற்றல் மேம்படுகிறது.
  • அதிக இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
  • இருதய நலன் மேம்படுகிறது.
  • செயற்கைக் காற்றையும் வெளிச்சத்தையும் தவிர்த்து இயற்கையான சூழலில் பயிற்சி செய்ய முடிவதால் உடலும் மனமும் இயற்கையோடு ஒன்றிணைகிறது.
  • செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுகிறது.
  • மன அழுத்தமும் மன சோர்வும் நீங்குகிறது.

மேற்படி நலன்களுடன் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தையும் அளிக்கிறது திறந்தவெளிப் பயிற்சி, குறிப்பாக மொட்டை மாடி பயிற்சி.

இப்படித்தான் சூரிய உதயம் எங்கள் மொட்டை மாடியில் காட்சி அளித்தது:

பின்னர்,

மெதுவாக, 

மெதுவா…க,

மெதுவா…….க, 

இப்பொழுது, தள்ளியிருந்த மேகங்களிலும் அதன் தாக்கம்

அதற்குள், சூரியன் இன்னும் வெளிவந்து…

அழகின் உச்சத்தில். வானத்தைப் படம் பிடிக்கும் ஒவ்வொரு முறையும், நவீன காமெரா வாங்க வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது.

மொட்டைமாடி பயிற்சியில் இதற்கும் மேல் வேறு என்ன வேண்டும்?

இதற்கு மேலும் வேண்டுமென்றால், நீங்கள் கன்னியாகுமரிக்கு ஒரு நடை சென்று வருவதுதான் சரி. ஏனென்று தெரியாதவர்கள் கீழுள்ள புகைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த புகைப்படம் வெறும் சூரிய உதயத்தைப் படம் பிடித்துக் காட்டவில்லை; சூரிய உதயத்திற்கு சில மணி நேரங்கள் முன்பே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உழைப்பையும் படம் பிடித்திருக்கிறது. நாம் ஒரு நாளில் இரசிக்கும் சில நிமிடங்கள் அவர்களின் தினசரி கடின உழைப்பின் சில வியர்வைத் துளிகள்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

4 Responses

  1. இயற்கையோடு லயிப்பது
    மனதிற்கு சந்தோசமாகவே உள்ளது உண்மைதான் sir , இவ்வளவு நன்மைகள் உள்ளதை அனைவருக்கும் பயன்படும்படி கூறியதற்கு நன்றி sir

    1. மிக்க நன்றி. ஆம், இயற்கையோடு ஒன்றியிருப்பது நம் உடல், மன நலத்திற்கு மிகவும் நன்மையானது. மேலும் அது நம் சிந்தனையையும் விரிவடைய வைக்கிறது.

        1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி! ஆம், ஆங்கிலத்தில் ‘best of both worlds’ என்று சொல்வது போல் உடலையும் மனதையும் அமைதியாக வைக்கும் இயற்கை மற்றும் உடலை வருத்தும் பயிற்சி – இரண்டுமே நலமான வாழ்வுக்கான வழிதான்; அதை அடைவதற்கான வழி திறந்தவெளி பயிற்சிதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்