சமச்சீர் உணவு என்கிற பதம் சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், காலம் காலமாக நம் முன்னோர்கள், சமச்சீரான உணவை இயல்பான உணவுப் பழக்கமாகவே வைத்து, சமச்சீரான உணவின் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர். பண்டைய தமிழ் சமூகத்தில் ஐவகை நிலங்களைச் சேர்ந்த மக்களின் உணவே சமச்சீரானதுதான்.
அறுசுவையும் தினசரி உணவில் இருப்பதை பின் வந்த தமிழர்களின் உணவுமுறையும் உறுதி செய்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் “எல்லா சத்தும் உடலில் சேரணும்” என்பதே. இன்றைய துரித உணவு காலத்தில் சமச்சீர் உணவு என்பதிலிருந்து பலரும் விலகி விட்டோம். சமச்சீர் உணவு என்றால் என்ன, சமச்சீர் உணவின் நன்மைகள் ஆகியவற்றை இப்போது பார்க்கலாம்.
சமச்சீர் உணவு என்றால் என்ன?
Source: Photo by Vanessa Loring: https://www.pexels.com/photo/plate-of-assorted-vegetables-beside-a-plate-of-nuts-and-beans-5966152/
நம் உடல் சரியாக இயங்கவும், பராமரிக்கப்படவும், நாம் நலமாக வாழவும் தேவையான சத்துகளைத் தருவது சமச்சீரான உணவாகும். சமச்சீரான உணவு என்பது ஐந்து முக்கிய ஊட்டச்சத்துகளை, சரியான விகிதத்தில் கொண்டதாகும். அந்த அய்ந்து முக்கிய ஊட்டச்சத்துகள்:
1) கரிநீரகி (carbohydrates)
2) புரதம் (proteins)
3) கொழுப்பு (fats)
4) உயிர்ச்சத்து (vitamins)
5) கனிமங்கள் (minerals)
இந்த அய்ந்து வகை ஊட்டச்சத்துகளுடன் நார்ச்சத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த அய்ந்து வகை ஊட்டச்சத்துகளுடன் நமக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்து தண்ணீர்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்துகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
பேரூட்டச்சத்துகளும் நுண்ணூட்டச்சத்துகளும் (Macronutrients and Micronutrients)
பொதுவாக, நம் உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளை பேரூட்டச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் என இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
பேரூட்டச்சத்துகள்: கரிநீரகி, புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றோடு தண்ணீரும் பேரூட்டச்சத்துகள் என்று வரையறுக்கப்படுகின்றன. பேரூட்டச்சத்துகள் உடல் நலத்திற்கு அதிக அளவில் தேவைப்படுபவையாகும். உடல் இயங்கத் தேவையான ஆற்றலைத் தருவதோடு உடல் அமைப்பை பராமரிக்கவும் தேவைப்படும் கலோரிக்களை பேரூட்டச்சத்துகள் வழங்குகின்றன. வளர்சிதை மாற்றத்திற்கும் பேரூட்டச்சத்துகள் அத்தியாவசியமாகின்றன.
நுண்ணூட்டச்சத்துகள்: உயிர்ச்சத்துகளும் கனிமங்களும் நுண்ணூட்டச்சத்துகள் ஆகும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு ஆகியவற்றில் நுண்ணூட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய்களைத் தவிர்க்கவும், நலமாக வாழவும் இந்த சத்துகள் அவசியம். நுண்ணூட்டச்சத்துகள் குறைவான அளவிலேயே நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
உயிர்ச்சத்துகளில், கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துகள் (fat-soluble vitamins) மற்றும் நீரில் கரையும் உயிர்ச்சத்துகள் (water-soluble vitamins) என்று இரண்டு வகைகள் உண்டு.
கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துகள் (Fat-Soluble Vitamins)
உணவை உண்ட பின், உணவில் உள்ள உயிர்ச்சத்துகளில் சில கொழுப்பில் கரைகின்றன. அவையே கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துகள் ஆகும். கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துகள் உடலின் கல்லீரல், தசைகள் மற்றும் கொழுப்பிழையத்தால் (adipose tissue) சேமிக்கப்படுகின்றன.
கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துகள்:
- வைட்டமின் A -கேரட், முட்டைகோசு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பால், முட்டை முதலியவை
- வைட்டமின் D – பசும் பால், செறிவூட்டப்பட்ட பாதாம் / சோயா பால், மீன் எண்ணெய் (cod liver oil), சால்மன் மீன், சார்டைன் மீன், முட்டை முதலியவை
- வைட்டமின் E – பூசணிக்காய், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள், பாதாம்
- வைட்டமின் K – ப்ராகலி, கடுகு கீரை, பசலைக் கீரை, காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், முட்டைகோசு, பச்சை பட்டாணி முதலியன.
நீரில் கரையும் உயிர்ச்சத்துகள் (Water-Soluble Vitamins)
நீரில் கரையும் உயிர்ச்சத்துகள் உடனடி பயன்பாட்டிற்காக உடலால் கிரகிக்கப்படுகின்றன. நீரில் கரையும் உயிர்ச்சத்துகளில் வைட்டமின் B12 மட்டுமே உடலால் சேமிக்கப்படும். ஏனைய உயிர்ச்சத்துகளில் கிரகிக்கப்படாதவை அனைத்தும் உடலால் சேமிக்கப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். எனவே, நீரில் கரையும் உயிர்ச்சத்துகளைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
நீரில் கரையும் உயிர்ச்சத்துகள் மொத்தம் 9. அவை:
- வைட்டமின் B-1 (thiamine) – எள், பயறு வகைகள், அன்னாசி, கடற்பாசி முதலியவை
- வைட்டமின் B-2 (riboflavin) – யோகர்ட், கடற்பாசி, முட்டை, சால்மன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பசலைக் கீரை, வாழைப்பழம், பேரீச்சம் பழம் முதலியவை
- வைட்டமின் B-3 (niacin) – பழுப்பு அரிசி, வேர்க்கடலை, வாழைப்பழம், அவகோடா, சால்மன் முதலியவை
- வைட்டமின் B-5 (pantothenic acid) – காளான், அவகோடா, வாழைப்பழம், முட்டை முதலியவை
- வைட்டமின் B-6 (pyridoxine) – கீரை வகைகள், கொண்டைகடலை, வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி முதலியவை
- வைட்டமின் B-7 (biotin) – சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முட்டை, வேர்க்கடலை, வால்நட் முதலியவை
- வைட்டமின் B-9 (folate, folic acid) – கீரை வகைகள், சூரியகாந்தி விதைகள், முழு தானிய வகைகள் முதலியவை
- வைட்டமின் B-12 (cyanocobalamin) – பால் பொருட்கள், முட்டை, மீன், மாமிசம் முதலியவை
- வைட்டமின் C – தக்காளி, குடைமிளகாய், காலிஃப்ளவர், முட்டைகோசு, ஆரஞ்சு, கொய்யா,
கனிமங்கள், முக்கிய கனிமங்கள் (macro minerals) மற்றும் சுவடறி கனிமங்கள் (trace minerals) என இருவகைப்படும். இவற்றுள் சுவடறி கனிமங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உடலுக்குத் தேவைப்படுகின்றன.
முக்கிய கனிமங்கள் (Macro-minerals)
முக்கிய கனிமங்கள், சுவடறி கனிமங்களை விட கூடுதல் அளவில் உடலுக்குத் தேவைப்படுகிறது.
முக்கிய கனிமங்கள் என்பன:
- Calcium – பால் பொருட்கள், கீரை, சால்மன், பேரீச்சம்பழம், அத்திப்பழம் முதலியவை
- Sodium – பீட்ரூட், கீரை வகைகள், கடல் உணவுகள் முதலியவை
- Magnesium – வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பூசணி விதைகள் போன்றவை
- Potassium – பசலைக் கீரை, உருளைக்கிழங்கு, ப்ராகலி, வாழைப்பழம், அவகோடா, உலர்ந்த பழங்கள் முதலியவை
- Phosphorous – பால் பொருட்கள், முழு தானியங்கள், சூரியகாந்தி விதைகள், கடல் உணவுகள் முதலியவை
- Chloride – தக்காளி, முழு தானிய வகைகள், ஆலிவ் முதலியவை
- Sulfur – கீரை வகைகள், முட்டை, மீன் முதலியவை
சுவடறி கனிமங்கள்
சுவடறி கனிமங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உடலுக்குத் தேவைப்படுகிறது.
சுவடறி கனிமங்கள் என்பன:
- Iron – பசலைக் கீரை, ப்ராகலி, கேரட், கொண்டைக்கடலை முதலியவை
- Copper – முழு தானிய வகைகள், கொட்டை வகைகள், கொய்யா, மாதுளை வகைகள்
- Iodine – கடற்பாசி, பால் பொருட்கள், இறால் முதலியவை
- Zinc – பழுப்பு அரிசி, பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பசலைக் கீரை, முந்திரி முதலியவை
- Manganese – பழுப்பு அரிசி, கருமிளகு, வாழைப்பழம், அன்னாசி முதலியவை
- Selenium – உருளைக்கிழங்கு, ப்ராகலி, பசலைக்கீரை, பச்சை பட்டாணி, முட்டை, மீன் முதலியவை
- Cobalt – பசலைக்கீரை, கொட்டை வகைகள், முட்டைகோசு, அத்திப்பழம், இறைச்சி முதலியவை
- Flouride – உருளைக்கிழங்கு, உலர்ந்த திராட்சை முதலியவை
சமச்சீர் உணவின் விகிதாச்சாரம்
உங்கள் கலோரி தேவையை முதலில் அறிவது சமச்சீர் உணவிற்குத் திட்டமிட உதவியாக இருக்கும்.
குறிப்பிட்ட உணவு தரக்கூடிய ஆற்றலின் அளவு கலோரிகளால் அளக்கப்படுகிறது. ஒருவரின் கலோரி தேவையைத் தீர்மானிப்பது:
- வயது
- உடல் எடை
- உடற்பயிற்சி
- உடல் நிலை
பொதுவாக பெண்களுக்கு ஒரு நாளில் 2,000 கலோரிகளும் ஆண்களுக்கு 2,500 கலோரிகளும் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
கரிநீரகி 1 கிராமிற்கு 4 கலோரிகளை அளிக்கிறது.
புரதம் 1 கிராமிற்கு 4 கலோரிகளை அளிக்கிறது.
கொழுப்பு 1 கிராமிற்கு 9 கலோரிகளை அளிக்கிறது.
பொதுவாக நாம் உண்ணும் உணவில்,
கரிநீரகி – 45% முதல் 60% வரை
புரதம் – 15% முதல் 20% வரை
கொழுப்பு – 25% முதல் 35% வரை
இருத்தல் வேண்டும்.
நார்ச்சத்து – பெண்கள் சுமார் 25 கிராம் வரையும் ஆண்கள் சுமார் 30 கிராம் வரையிலும் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அய்ந்து வித உணவுகள்
மேலும், சமச்சீரான உணவு முழுமையடைவது அய்ந்து வித உணவுகளைச் சேர்க்கும் போதுதான். அந்த அய்ந்து வித உணவுகள்:
- பழங்கள் மற்றும் காய்கள்
- தானியங்கள்
- பால் பொருட்கள்
- மாமிச உணவுகள் / இணையான மாற்று உணவுகள்
- கொழுப்பு உணவுகள்
சமச்சீர் உணவின் நன்மைகள்
சமச்சீர் உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
- உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது
- நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கிறது
- உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது
- எலும்புகள் மற்றும் தசைகளைப் பலப்படுத்துகிறது
- உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
- உடலில் தேவையற்ற கொழுப்பைப் போக்க உதவுகிறது
- இருதய நலனை மேம்படுத்துகிறது
- இரத்தக் குறைப்பாடைப் போக்குகிறது
- இளமையான தோற்றத்தைத் தருகிறது
- ஆரோக்கியமான மனநிலையைத் தருகிறது
சங்ககால தமிழரின் வாழ்வில் சமச்சீர் உணவு முறை
சங்ககாலத்தில், தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியை அதன் தன்மைக்கேற்றாற் போல் அய்ந்து வகையாகப் பிரித்தனர். அவை:
1) குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த பகுதியும்
2) முல்லை – காடும் காட்டைச் சார்ந்த பகுதியும்
3) மருதம் – வயலும் வயலைச் சார்ந்த பகுதியும்
4) நெய்தல் – கடலும் கடலைச் சார்ந்த பகுதியும்
5) பாலை – மணலும் மணலைச் சார்ந்த பகுதியும்
இந்த ஐவகை நிலங்களுக்கும் உணவு முதல் கடவுள் வரை தனித்தனியாக அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியம் பாலையைத் தவிர்த்த நான்கு வகை நிலங்கள் பற்றி விவரிக்கிறது. ஆனால், பின்னால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் பாலை உட்படை ஐந்திணைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சியும் முல்லையும் நீண்ட காலம் மழை பொழியாமல் வறண்டு போகும் போது உருவாவதுதான் பாலை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
ஐந்து வகை நிலங்களைச் சார்ந்த மக்களின் உணவுமுறையாக பண்டைய இலக்கியங்களில் கூறப்படுபவை:
குறிஞ்சி – கிழங்கு வகைகள், பலா, மூங்கில் அரிசி, தேன், வரகு, தினை, எள், இறைச்சி, வெண்ணெய் முதலியவை
முல்லை – சாமை, வரகு, பால், வெண்ணெய், கிழங்கு, காட்டு விலங்கின் இறைச்சி
மருதம் – செந்நெல், நெல் சோறு, உளுந்து களி, பழஞ்சோறு, பனங்கள்,
நெய்தல் – மீன், அரிசி சோறு, பனங்கள்
பாலை – கிடைப்பதைக் கொண்டே வாழ்ந்தனர்
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஒவ்வொரு நிலத்தை சார்ந்தவர்களின் பிரதான உணவாக அவர்கள் பகுதியில் கிடைக்கக் கூடிய உணவாக இருந்திருக்கிறது. ஆனாலும், பண்டமாற்று முறையில் மற்றைய பகுதிகளின் இயல்பான உணவையும் பெற்று உண்டு வாழ்ந்திருக்கின்றனர்.
மண் சார்ந்த உணவு முறையோடு பண்டமாற்றின் மூலம் பெற்ற உணவையும் பார்க்கும் போது, அனைத்து வித சத்துகளையும் பெறக் கூடிய வகையில் காய், பழம், சிறுதானியம், அரிசி, கொழுப்பு பொருட்கள் மற்றும் இறைச்சி என அனைத்தும் அவர்களின் உணவில் இடம்பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
சங்க கால உணவு முறை பற்றி நான் படிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
நவீன காலத்தில் கூறப்படுவது போல், சமச்சீர் உணவின் விகிதாச்சாரத்தை போன்று சத்துகள் சார்ந்து எதாவது அடிப்படை நெறிகளை வகுத்திருந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால், கடுமையான உடல் உழைப்போடு கூடிய மண்ணுக்கேற்ற உணவு முறையும் உண்ணும் முறையும்தான் நம் முன்னோர்கள் மிகுந்த நலமுடன் வாழக் காரணமாயிருந்திருக்கின்றன.
ஆக, நாம் உண்ணும் உணவில் அனைத்து சத்துகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் சமச்சீர் உணவின் நன்மைகள் அனைத்தையும் பெற வேண்டுமானால், உடற்பயிற்சி செய்தலும், இரவில் ஆழ்ந்த, ஆரோக்கியமான உறக்கம் கொள்ளுதலும் அத்தியாவசியமானது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
AGR SHREE SIVA SHAKTHI NAGAR
VEMBAKKAM, TIRUVANNAAMALAI DIST.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கத்தில், தாலூகா அலுவலகத்திற்கு அருகாமையில், பள்ளிக்கூடங்கள், வங்கிகள், சந்தை உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் DTCP approved நிலங்கள் விற்பனைக்கு.
செய்யாறு SEZ SIPCOT-லிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே நிலையத்திலிருந்து வெறும் 20 நிமிடங்கள் தொலைவிலும் நிலங்கள் விற்பனைக்கு உள்ளன. 30 அடி மற்றும் 20 அடி சாலைகள் போடப்பட்டுள்ள இந்தப் பகுதி சிறந்த இலாபத்தைத் தரும் முதலீடாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: 9841770302 / 7092597732 / 9941221126