Table of Contents
Photo Credit: P.R. from FreeImages
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உண்ட உணவு மற்றும் உணவு அருந்துவதில் பின்பற்றிய நடைமுறைகள், இயற்கையோடு ஒன்றி, இயற்கையை அரவணைத்தும், இயற்கையால் அரவணைக்கப்பட்டும், மன அழுத்தங்கள் அற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மகத்தானது. அவர்கள் மறைந்தாலும் தங்களது அனுபவ அறிவை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் சமகாலத்தில் ஆய்வு மூலம் தெரிந்து கொள்ளும் தகவல்களை அவர்கள் தங்களின் அனுபவத்தின் மூலம் அன்றே அறிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றுதான் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்து வந்த அதி அற்புத மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி.
இஞ்சி பூண்டு என்று இந்த ஜோடியை மசாலாவாகச் சேர்த்து மணமணக்க சமைப்பதை நல்ல சுவையான உணவாக வரையறுக்கலாம்; ஆனால், இஞ்சி பூண்டு என்பது வெறும் மசாலாவுக்கானது இல்லை. பூண்டிற்கு நாம் பிறிதொரு நாளில் வருவோம். இஞ்சியை எடுத்துக் கொண்டோமானால், அதன் மருத்துவ குணங்கள் அற்புதமானவை. அவற்றை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
இஞ்சியின் தன்மைகள்
இஞ்சியில் 400-க்கும் அதிகமான கூறுகள் (compounds) உள்ளன. இவற்றில் முக்கியமானதான gingerol-தான் இஞ்சியின் பெரும்பாலான மருத்துவ குணங்களுக்கும் காரணமாகிறது. இஞ்சியின் தன்மைகளில் முக்கியமான சில:
- Antioxidant (cells, protein மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Antibiotic (பாக்டீரியாவை அழித்தல்)
- Hypotensive (இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்)
- Hypoglycemic (இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்தல்)
- Anticancer (புற்று நோய் உருவாவதைத் தடுத்தல்)
- Antimutagenic (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-வில் ஏற்படும் மாற்றத்தைத் தடுத்தல்)
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
இஞ்சியின் மருத்துவ குணங்களில் சில:
- சளி, இருமலைப் போக்குகிறது
- தொண்டை வலியைப் போக்குகிறது
- சுரத்தைப் போக்குகிறது
- இருதய நலத்தைப் பாதுகாக்கிறது
- சீரணத்தை மேம்படுத்துகிறது
- நெஞ்செரிச்சல், குமட்டல், வாய்வுக் கோளாறு, உப்புசம் ஆகியவற்றைப் போக்குகிறது
- நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது
- கர்ப்பிணிப் பெண்களின் மசக்கையைப் போக்க உதவுகிறது
- மலச்சிக்கலை நேர் செய்கிறது
- பசியின்மையைப் போக்குகிறது
- ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது
- தசை வலியை நீக்குகிறது
- மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது
- மூட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுகிறது
- தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது
- அதிகக் கொழுப்பைக் குறைக்கிறது
- புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது
- மூளையின் நலனைப் பாதுகாத்து, வயது கூடுவதால் ஏற்பட வாய்ப்புள்ள மறதி, Alzheimer’s போன்ற நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கிறது
இஞ்சியும் மேனி பராமரிப்பும்
இது சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால், இஞ்சி தோற்றத்துக்கு பொலிவு கூட்டவும் உதவுகிறது. இதோ சில பலன்கள்:
- சருமத்தை மென்மையாக்குகிறது; சரும நிறத்தை மேம்படுத்துகிறது
- வயதாவதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது
- சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுக்களைப் போக்குகிறது
- பருக்களைப் போக்குகிறது
- வெட்டுக் காயங்களை ஆற்றுகிறது
- பொடுகைப் போக்குகிறது
- கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது
இஞ்சி தேநீர்
இஞ்சி தேநீர் உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. வழக்கமான காபி, டீ பிரியர்களையும் சுண்டி இழுக்கும் சுவை இஞ்சி தேநீருக்கு உண்டு.
செய்முறை
- ஒரு அங்குல அளவிற்கு இஞ்சியை எடுத்து நன்றாக அலசிய பின் தோலை சீவவும்.
- தோல் சீவிய இஞ்சியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
- ஒரு கோப்பை தண்ணீரில் மெலிதாக சீவிய இஞ்சியை சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.
- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை நன்றாகக் குறைத்து மேலும் ஓரிரு நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். உங்களுக்கு அதிகத் திடமான தேநீர் வேண்டுமானால் சுமார் அய்ந்து நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் வைக்கவும்.
- அடுப்பை அணைத்துத், தேநீரை வடிகட்டவும்.
- கூடுதல் சுவைக்காகச் சிறிது தேன், வெல்லம், நாட்டுச் சர்க்கரை இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சிறிதளவு சேர்த்துப் பருகவும்.
இஞ்சி தேநீரின் பலன்கள்
- சளியைக் கரைக்கிறது
- சீரணத்தை மேம்படுத்துகிறது
- உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது
- நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
- இருதய நலனைப் பாதுகாக்கிறது
- வயிற்று கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
- தலைவலியைக் குறைக்க உதவுகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
- கர்ப்பிணிப் பெண்களின் மசக்கையை சரி செய்ய உதவுகிறது
- ஊளைச் சதையைக் குறைக்க உதவுகிறது
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.