yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு. நிச்சயமாக இது வானஜாலம் பற்றியதுதான் என்று எண்ணி, பதிவை மறந்து மாடிக்கு விரைந்தேன். இதோ பதிவு, ஆனால், திட்டமிட்டது அல்ல, இயற்கை இன்று திட்டமிட்டதுதான் பதிவேற்றம் ஆகிறது.
முதலில் கண்ணில் கண்ட காட்சி:
ஒரு புறம் இப்படி:
மறுபுறம் இப்படி:
“பற காக்கா, பற. கருமேகம் உன்னை சூழ்வதற்குள் பற” தனியாக மாட்டிக் கொண்டதோ என்று நினைத்தேன்…
“நாங்கள் என்று எங்கள் காகங்களைத் தனியாக விட்டிருக்கிறோம்?” என்று மீதமுள்ள காகங்கள் என்னைக் கேட்கிறதோ?
தண்ணீர் தொட்டிக்கு மேல் என்னால் ஏறாமல் இருக்க முடியவில்லை. அங்கிருந்து ஏரி:
காற்று மிக பலமாக வீசவே, காகத்தை விட வேகமாகக் கீழே இறங்கி விட்டேன். அதற்குள் ஏரிக் காட்சி இப்படி மாறி விட்டது:
இப்பொழுது மறுபக்கத்திலும் மேகத் திரள்:
ஏரி தெளிவாகவே தெரியவில்லை..
அருமையான நம்பிக்கையைத் தந்த வானம் எதிர்பார்ப்பைக் காப்பாற்றியது. கோடைக் கால வெயிலிலிருந்து தற்காலிக நிவாரணம்; மனதுக்கும் கூட.
சில நிமிடங்கள் வேலையை ஒத்தி வைத்தாலும் இயற்கையில் இலயிப்பது அலாதியான உணர்வுதான். என்று சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனத்தைப் பார்ப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி எழுதினேனோ அன்றிலிருந்து அந்த இரண்டு நேரங்களிலும் நான் மொட்டை மாடிக்குச் செல்ல இயலாமல் போய் விட்டது. பரவாயில்லை, இன்றைய நாள் வேறு ஒரு அனுபவம். “தினம் இருக்கற வானம்தானே. இன்னிக்கு இல்லன்னா நாளைக்குப் பாத்துக்கலாம்” என்று நினைத்து விடக் கூடாது.
இயற்கை எண்ணிலடங்கா அற்புதங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. மேலும் இது இயற்கையை இரசிப்பது மட்டுமல்ல, இத்தருணங்கள் மனதிற்கு ஓய்வு தரும்; இடையறாத சிந்தனையிலிருந்து மனதை விடுவித்து மன அமைதியை ஏற்படுத்தும், இயற்கையோடு மனிதனை ஒன்ற வைக்கும், எல்லையற்ற இப்பிரபஞ்சத்தின் முன் நாம் எத்துணை சிறியவர் என்ற தன்னடகத்தையும் தரும்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வீட்டுக்குள் இருந்து கொண்டு அலுவலக வேலை செய்ய வேண்டிய சூழல் வந்தாலும், சிறிது நேரம் இயற்கையோடு ஒன்றி இருக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுகிறோம். இது நம் மனதுக்குப் புத்துணர்வு ஊட்டுவதாக இருப்பதோடு கொஞ்சம் அக்கம்பக்கத்து மனிதர்களோடு உறவாடும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. என்ன இருந்தாலும் நாம் ஒரு சமூக விலங்கல்லவா?
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.