அனைத்து இயற்கை விரும்பிகளையும் ஈர்ப்பது போல் வானம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. தலை தூக்கிப் பார்க்க முடியாத அளவு சூரியன் தகிக்கும் நேரம் தவிர வேறு எப்பொழுது மொட்டை மாடிக்குப் போக வேண்டி வந்தாலும் வானத்தில் சிறிது மனதைத் தொலைக்காமல் திரும்ப முடிவதில்லை. சூரிய உதயத்திற்கு முன்னால், சூரியன் எட்டிப் பார்க்கத் தொடங்கும் போது, மதிய சூரியனை மேகங்கள் மறைக்கும் அந்த நொடியில், சூரியன் மறையத் தொடங்கும் பொழுதில், நிலவின் ஒளியில், கருமேகக் கூட்டங்கள் திரண்டோ அல்லது வெள்ளை மேகங்கள் பரவியோ கிடக்கும் தருணங்களில், சில நேரங்களில் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும் நீல நிற வானம் என வானத்தை சாதாரண கண்களால் எவ்வளவு இரசிக்க முடியுமோ அவ்வளவு இரசித்துக் கொண்டிருக்கிறேன்.
இதோ சில நீல வானக் காட்சிகள்:
இந்த அனுபவங்களையும் இதற்கு மேலும் பல மடங்கு அதிகமான அற்புத நொடிகளையும் நீங்கள் இரசித்திருக்கலாம். அவற்றில் நிச்சயம் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்கள் இடம் பிடித்திருக்கும்.
சூரிய உதயத்திலும் சூரிய அத்தமனத்திலும் இலயிக்கும் நேரங்களில் உங்கள் மனம் லேசாவதை உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், இந்த தினசரி நிகழ்வுகளின் அற்புத பலன்களில் இதுவும் ஒன்று.
சூரிய உதயத்திற்கு முன் எழுவதால் ஏற்படும் நன்மைகள்
சூரிய உதயத்தைப் பார்க்க வேண்டுமென்றால் காலை சீக்கிரம் எழ வேண்டுமென்பதால், கிடைக்கும் பலன்கள் அதிகரிக்கின்றன. விடியலுக்கு முன் எழுவதால் கூடுதல் நேரம் கிடைக்கிறது.
இதுவரை நேரப் பற்றாக்குறையால் உடற்பயிற்சி செய்ய இயலாமல் போனவர்களுக்கு விடியும் முன் எழுவதால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கிறது.
நீங்கள் நேரப்பற்றாக்குறையால் ஒத்திப் போட்ட பல வேலைகளையும் செய்து முடிப்பதை அதிகாலை எழுதல் சாத்தியப்படுத்துகிறது.
காலை சீக்கிரம் எழ வேண்டுமென்றால் இரவில் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும் என்பதால் உடல், மனம் சீராக இயங்கத் தேவையான ஓய்வை அளிக்க முடிகிறது – விளைவு முழு உடல், மன நலம்.
காலையில் போர்த்திப் படுக்கும் சுகத்தைக் கைவிட முடியாதவர்கள் ஒன்றை மட்டும் யோசித்துப் பார்க்க வேண்டும் – அதிகாலையில் கூடுதல் தூக்கத்தில் தொலைக்கும் நேரத்தை ஈடுகட்ட நாள் முழுவதும் நீங்கள் போராட வேண்டியிருக்கும். அதனால் வேலைகளில் ஏற்படும் பரபரப்பு, மன அழுத்தம் மற்றும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து வேலைகளை முடிக்க வேண்டிய நெருக்கடி அல்லது வேலைகளை ஒத்திப் போட்டு சுமையை அதிகப்படுத்திக் கொள்ளுதல் என சிரமங்களின் பட்டியல் நீளும். சூரிய உதயத்துக்கு முன் எழுதலால் அன்றைய நாளை ஆக்கபூர்வமானதாக ஆக்க முடிகிறது.
சூரிய உதயத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பலன்கள்:
- மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படுகிறது
- ஒவ்வொரு விடியலும் புதிய நம்பிக்கையைத் தருகிறது; அன்றைய தினத்தை உத்வேகத்துடன் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கிறது.
- சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனத்தின் கதிர்கள் நம் சர்காடியன் ரிதமின் செயல்பாடுகளுக்குத் துணை செய்வதன் மூலம் நமது தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தூக்கமின்மை கோளாறுகள் சர்காடியன் ரிதத்தின் இயக்கத்தைப் பாதிக்கிறது. சர்காடியன் இயக்கம் சீராக இல்லையென்றால் இருதயம், நோய் எதிர்ப்புத் திறன், மறு உற்பத்தி உறுப்புகள் உள்ளிட்ட உறுப்புகளும் செயல்பாடுகளும் பாதிப்படைகின்றன. சர்காடியன் ரிதம் சீராக இயங்கும் போது, உடலின் இயக்கம் மேம்படுகிறது, மன அழுத்தம் நீங்கி மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. (https://www.sciencedaily.com/releases/2020/02/200220141731.htm)
சமீபத்தில் ஒரு நாள் வீட்டு மொட்டை மாடியில் சூரிய உதயக் காட்சி:
தொடக்கமே ‘படம் பிடிக்கத் தயாராக இரு’ என்று கட்டியம் கூறியது:
அடுத்த சில நொடி காத்திருப்புக்குப் பின்:
மேலும் சில நொடிகளுக்குப் பின்:
இத்தனை ஆர்ப்பாட்டத்திற்குப் பின் சூரியன் மெல்ல மேலெழுந்தது:
சூரிய அத்தமனத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பலன்கள்
- அன்றைய பொழுதின் கடினமான பணிச்சுமைகள், அழுத்தங்கள் ஆகியவை மறந்து மனம் இலேசாக ஆகிறது.
- இன்றைய தினத்தை விட நாளைய தினத்தை மேலும் ஆக்கபூர்வமானதாக ஆக்கும் திட்டமிடல் நேர்மறை எண்ணங்களால் மனதை நிறைக்கிறது.
- அன்றைய தினத்தின் தோல்வி, கோபம், வருத்தம் போன்ற எதிர்மறைகள் மறைந்து இயற்கையில் மனம் ஒன்றுகிறது.
- மேலே கூறியுள்ளது போல் சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனத்தைப் பார்ப்பதால் நம் சர்காடியன் ரிதம் சீராக இயங்கி உடல், மன நலனைப் பாதுகாக்க உதவுகிறது.
சூரிய அத்தமனம் மனதைக் கனமாக ஆக்குவதும் உண்டு. ஒவ்வொரு நாளையும் வரப் போகும் நாளைப் பற்றிய அச்சம் மற்றும் எதிர்பார்ப்பு கலந்து எதிர்கொள்பவர்களுக்கு, அன்றைய நாளின் வெற்றியற்ற தருணங்கள் சூரிய அத்தமனத்தைக் கனமான பொழுதாக ஆக்கக் கூடும். ஆனால், ஒவ்வொரு சூரிய அத்தமனத்தையும் ஒரு சூரிய விடியல் தொடரும் என்ற நம்பிக்கை, அன்றைய சூரிய அத்தமன பொழுதுகளை விடியலுக்கான அறிகுறியாக உணர வைக்கும்.
இவை அனைத்தையும் கடந்து சூரிய உதயத்தையும் அத்தமனத்தையும் காணும் ஒவ்வொரு நொடியும் எல்லையில்லா இப்பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும் வலிமை மிக்கவர்களாகக் கருதிக் கொள்பவர்கள் கூட இயற்கையின் வல்லமைக்கு முன்பு சற்றும் வலிமை அற்றவர்கள் என்பதையும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். இது நமக்குள் அடக்கம், அமைதி போன்ற பண்புகளையும் வளர்க்கும். அவ்வாறே இயற்கையின் பால் நன்றி உணர்வையும் வளர்க்கும்; நாம் பார்த்து இரசிக்கும் இக்காட்சிகளை இதே அளவு அழகோடு நம் சந்ததியினர் பார்க்கும் வகையில் நாம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற சமூக பொறுப்பையும் நமக்குள் அதிகப்படுத்தும்.
சமீபத்தில் மலைப்பகுதியில் படம் பிடிக்கப்பட்ட சூரிய அத்தமன காட்சிகள்:
விடியும் வரை பிரியா விடை
பூங்காவோ, மொட்டை மாடியோ, கடற்கரையோ, மலைப்பகுதிகளோ எங்கிருந்து சூரிய உதயத்தையும் அத்தமனத்தையும் பார்த்தாலும் அவை கவித்துவமான நொடிகளையும் மன மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன;
இதோ தெரு ஓர சூரிய உதயம்
பல நேரங்களில் மொட்டை மாடி சூரிய அத்தமனம் மனதைக் கொள்ளைக் கொள்ளும்:
சூரியனோடு நீங்கள் உறவாடத் தொடங்கினால், நீங்களே எதிர்பாராத அளவில் உங்கள் மனம் அதில் இலயித்துப் போய் விடும்; கற்பனையும், விளையாட்டுத்தனமும் சேர்ந்து கொள்ளும். சரியான நொடியைப் படம் பிடிக்க வேண்டும் என்று பொறுமையோடு காத்திருக்கவும் வைக்கும்.
இதோ சூரியனை ‘பறவை’ உறிஞ்சும் காட்சிகள்:
இயற்கை ஒரு அருமருந்து. வாய்ப்புள்ளவர்கள் தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்கா போன்ற இடங்களில் இயற்கையோடு ஒன்றலாம். அல்லது வீட்டு மொட்டை மாடியில் இந்த அற்புதமான பொழுதுகளால் மனதை நிரப்பலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.