உடல் மன ஆரோக்கியம்

நாளை அற்புதமான நலத்துடன் தொடங்க, அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 7 எளிய காலை வழக்கங்கள்

உங்களுடைய காலை நேரம் பரபரப்பாகவோ சுவாரசியமற்றதாகவோ இருக்கிறதா? நமக்கு மட்டும் தான் இப்படி சலிப்பாய் இருக்கிறதோ என்று எண்ண வேண்டாம். இன்றைய அவசர யுகத்தில் பலரும் எதிர்கொள்ளும் நிலைதான் இது. நம்முடைய காலை நேரத்தை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்பது பொறுத்துத்தான் நமது நாளும் அமைகிறது. எளிமையான, கவனத்தை ஒருங்கிணைக்கும் காலை நேர வழக்கங்கள் நம் மனதில் அமைதியையும் தெளிவையும் ஏற்படுத்துவதோடு, நம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது. இன்றைய பதிவில், நம்முடைய நாளை நேர்மறையானதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் ஆக்கக் கூடிய எளிமையான, அதே நேரத்தில் ஆற்றல் வாய்ந்த காலை நேர வழக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

1) நன்றி உணர்வோடு விழித்தெழுங்கள்

தூக்கம் கலைந்ததுமே பரபரவென்று எழுந்து கொள்வதோ உடனடியாகக் கைபேசியை எடுப்பதையோ தவிர்க்கவும். தூங்கி எழுந்ததும் படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி அமைதியாக உங்களுக்கு முதல் நாள் நடந்த நல்லவைகளுக்கு நன்றி கூறுங்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றாலும் எதேனும் இன்னல் தான் ஏற்பட்டது என்றாலும் அந்த இன்னலை இதுவரை கடக்க உதவியதற்கு நன்றி கூறுங்கள். காலையில் நன்றியுணர்வோடு நாளைத் தொடங்குவது மனதில் அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும்  ஊக்கத்தையும் உருவாக்கும். 

With thanks, Image Source: Photo by RDNE Stock project: https://www.pexels.com/photo/money-inside-a-thank-you-card-7363097/

நன்றியுணர்வு கொண்டிருத்தலும், நன்றி தெரிவித்தலும் மனதில் உள்ள பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் போக்குவதோடு மனதில் நேர்மறை எண்ணங்களையும் உருவாக்குவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. எனவே, காலையில் நமக்கு நடந்த நல்லவைகளுக்காக நன்றி தெரிவித்தலுடன் நாளைத் தொடங்குவது சிறப்பான பலனைத் தரும்.

2) உடற்பயிற்சி

காலையில் உடலை நீட்சியடையச் செய்யும் பயிற்சிகளை செய்யும் போது உடலில் உள்ள இறுக்கங்கள் நீங்கி உடல் அசைவுகளை இலகுவாக்குவதோடு உடலுக்குப் புத்துணர்வையும் அளிக்கும். இதுவரை உடற்பயிற்சி பயிலாதவர்களாக இருந்தால் எளிமையான யோகாசனங்களை செய்யத் தொடங்கலாம். பிடிலாசனம், மர்ஜரியாசனம், பாலாசனம், பஸ்சிமோத்தானாசனம் மற்றும் அதோ முக ஸ்வானாசனம் போன்றவை உடலுக்கு நீட்சியைத் தருகிறது.

Downward Facing Dog Pose

சூரிய நமஸ்காரம் என்னும் அருமையான யோகா தொடர் பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் சுறுசுறுப்பைத் தரும். உடலை நீட்சியடையச் செய்வது மனதை அமைதியாக்க உதவுவதாக ஆய்வு அறிவிக்கிறது. மனம் அமைதியாகும் போது நம் செயல்திறன் அதிகரிக்கிறது. அன்றைய நாளும் சிறப்பாக அமைகிறது.

3) உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து

ஒரு கோப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறோ, இஞ்சி, துளசி அல்லது பட்டை சேர்த்தோ அருந்தவும். உடலுக்கு நீர்ச்சத்து தருவதோடு செரிமானத்தையும் உடலியக்கத்தையும் தூண்டுகிறது.

4) மூச்சுப் பயிற்சி அல்லது தியானம்

அமைதியான இடத்தைத் தேர்வு செய்து அமர்ந்து கொள்ளவும். மூச்சில் உங்கள் கவனத்தை செலுத்தவும். முறையாக மூச்சுப் பயிற்சி பயின்றவர்கள் நாடி சுத்தி பிராணாயாமம் போன்ற பிராணாயாமங்களைச் செய்யலாம்.Lotus Poseஅல்லது மெல்லிதாக இயற்கையான ஓசைகளை பின்னணியில் ஓட விட்டு கண்களை மூடி அமைதியாக சிறிது நேரம் அமரலாம். இது மனதை அமைதிப்படுத்துவதோடு மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

5) இயற்கையோடு சிறிது நேரம் செலவிடுங்கள்

வீட்டில் தோட்டம் இருந்தால், சிறிது நேரம் தோட்ட வேலையில் ஈடுபடலாம். அல்லது, வெளியில் நடைப்பயிற்சி செய்யலாம்.

A walk in nature with pet

இயற்கை வெளிச்சமும் காற்றும் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு ஊட்டி மனநிலையை மேம்படுத்தும். 

6) இன்றைய நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்களுடைய வழக்கமான வேலைகளில் ஈடுபடத் தொடங்கும் முன் இன்றைய தினத்தில் நீங்கள் உங்களை என்னவாக உணர விரும்புகிறீர்கள் என்று சிறிது சிந்தியுங்கள். அமைதியானவராகவா, தன்னம்பிக்கைக் கொண்டவராகவா அல்லது மகிழ்ச்சியானவராகவா? நீங்கள் இன்று எப்படி உணர விரும்புகிறீர்களோ அதை உறுதிமொழியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது இன்றைய நாளுக்கான வேலைகளை நீங்கள் தேர்வு செய்யும் மனநிலையோடு செய்ய உதவியாக இருக்கும். அதோடு, மனதை ஒருங்கிணைக்கவும் தன்னுணர்வோடு செயல்படவும் உதவும்.

7) சத்தான உணவை மனம் ஒருங்கிணைய எடுத்துக் கொள்ளுங்கள்

சத்துகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, உண்ணும் போது உங்கள் கவனத்தை உணவில் குவித்து உண்ணுவது சிறந்தது. தொலைக்காட்சி, அலைபேசி, புத்தகம் போன்றவற்றை உணவு உண்ணும் போது அறவே தவிர்க்கவும்.

காலை வழக்கங்கள் நீண்டதாகவோ கடினமானதாகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மனதை ஒருங்கிணைத்து 15 முதல் 30 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தாலே உங்கள் மனநிலையையும் உடல் ஆற்றலையும் மேம்படுத்தி விடும். 

🌿 இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு விருப்பமான காலை நேர வழக்கத்தை பின்னூட்டத்தில் பதிவிடுங்களேன். 

📌 யோகா, மனம் ஒருங்கிணைந்த வாழ்வு மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வது குறித்த பதிவுகளைப் படிக்க எங்கள் வலைப்பக்கத்தோடு இணைந்திருங்கள்.

🌿 உங்கள் காலைப்பொழுதை சிறக்கச் செய்ய கூடுதலான குறிப்புகள்

உங்கள் காலை நேர வழக்கங்களை மேலும் மெருகேற்ற விரும்புகிறீர்களா? உங்கள் நலனையும் ஆக்கத்திறனையும் மேம்படுத்த இதோ சில எளிமையான ஆனால் அற்புதமான பலன் தரும் யோசனைகள்:

  • காலையில் ஒரு கோப்பை மூலிகை பானத்தைப் பருகலாம். ஆற்றலை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தவும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் natural supplements எடுக்கலாம்.

  • உங்கள் உடலிற்கும் பயிற்சிக்கும் ஏற்ற யோகா விரிப்பைத் தேர்வு செய்யுங்கள். உடலின் இறுக்கத்தைத் தளர்த்தவும் வளைவுத்தன்மையை அதிகப்படுத்தவும் ergonomic yoga mat உதவுகின்றன.

  • மனதை ஒருநிலைப்படுத்துவதில் சிரமம் இருந்தால் guided meditation app போன்றவற்றைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இது உங்களுக்குப் பேருதவியாய் இருக்கும்.

  • ஏதோ ஒன்றை அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்த்து சத்தான உணவுகளைத் தேர்வு செய்யுங்கள். பழங்கள், கொட்டைகள் விதைகள் போன்றவற்றைக் கொண்ட பானங்களைப் பருகலாம். இணையதளத்தில் nutritious smoothies என்று தேடினால் சிறந்த பானங்களின் செய்முறைகளைப் பார்க்கலாம்.

  • பெப்பர்மின்ட் எசன்சியல் எண்ணெய் போன்ற மனதுக்கு புத்துணர்வு ஊட்டும் எசன்சியல் எண்ணெய்களை தியானம் செய்யும் போது காற்றில் பரவச் செய்யலாம்.

  • உங்களுடைய எண்ணங்கள், அன்றைய நாளுக்கான திட்டம் மற்றும் நீங்கள் நன்றி செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து ஒரு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளலாம். இது ஊக்கத்தையும் உத்வேகத்தையும் தரும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்