அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது.
உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது.
மறிமான் பற்றிய முக்கிய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
மறிமான் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
வளைந்து, நீண்டு, சிறிதாக என்று பல வகைகளில் மறிமான் கொம்புகள் இருக்கும். சில வகையான மறிமானிற்கு இரண்டிற்குப் பதிலாய் நான்கு கொம்புகளும் இருக்கும்.
மறிமானைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சில:
- மறிமான்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்றன.
- புல்வெளி பிரதேசங்களிலும், பாலைவனங்களிலும், மரங்களும் புற்களும் பரவிக் கிடக்கின்ற பிரதேசங்களிலும் மறிமான்கள் வாழ்கின்றன.
- வேட்டையாடிகள் துரத்தும் போது மறிமான்கள் மணிக்கு கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
- சில வகை மறிமான்கள், எதிரிகளால் துரத்தப்படும் போது 10 அடி உயரத்திற்குக் காற்றில் எழும்பும் திறன் கொண்டவை.
- மறிமான்களுக்குக் கூர்மையான பார்வை உண்டு. சில மறிமான்களுக்குக் கூர்மையான கேட்கும் திறனும் உண்டு.
- மறிமான்கள் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும்.
சுற்றுச்சூழலில் மறிமான்களின் பங்கு
மறிமான்கள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பங்காற்றுகின்றன. புற்களையும் தாவரங்களையும் மேய்வதன் மூலம் அதிக தாவர வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றன. இதன் மூலம் இயற்கை சமநிலை பாதுகாக்கப்படுகிறது.
தொடர் மேய்ச்சல் மற்றும் தங்களின் சாணம் ஆகியவற்றின் மூலம் மண்ணை வளப்படுத்துகின்றன.
பல இடங்களுக்கும் செல்லும் மறிமான்கள் விதைகளைப் பரவச் செய்வதன் மூலம் பல்வேறு இடங்களிலும் மரம் வளர்வதற்குத் துணைபுரிகின்றன.
சிங்கம், புலி, காட்டு நாய் போன்ற வேட்டையாடிகளுக்கு இவை உணவாவதன் மூலம் உணவுச்சங்கிலி பாதுகாப்பிலும் பங்காற்றுகின்றன.
அழிவின் விளிம்பில் மறிமான்கள்
91 வகை மறிமான்களில் 25 வகை மறிமான்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது.
மறிமான்கள் அழிவின் விளிம்பில் இருக்கக் காரணம் என்ன?
மறிமான்கள் அழிவின் விளிம்பில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்:
- சருமத்திற்காகவும் உணவுக்காகவும் மனிதர்களால் கொல்லப்படுதல்
- கொம்புகளின் மருத்துவ குணங்களுக்காகவும், அலங்காரப் பொருட்களாய்ப் பயன்படுத்தவும் கொல்லப்படுதல்
- வேட்டையாடி விலங்குகளால் வேட்டையாடப்படுதல்
- உணவுப் பற்றாக்குறை
- காலநிலை மாற்றங்கள்
1980 முதல் 1990-கள் வரை திபெத் நாட்டில் மறிமான்கள், அவற்றின் சருமத்திற்காகப் பெருமளவில் வேட்டையாடப்பட்டு வந்தன. இலேசாகவும் மென்மையாகவும், அதே நேரத்தில் கதகதப்பைத் தருவதாகவும் இருக்கும் மறிமான்களின் தோலினால் செய்யப்பட்ட சால்வைகளுக்குப் பெரும் கிராக்கி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் திபெத்தின் 90% மறிமான்கள் அழிக்கப்பட்டதாக ஆய்வு அறிவிக்கிறது.
நாம் என்ன செய்ய முடியும்?
நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளிலும் ஒரு உயிரின் வலி இருக்கிறதா என்பதை முதலில் பரிசீலனை செய்ய வேண்டும். இயற்கை முறையில் , சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சால்வை, போர்வை, கைப்பை, காலணி போன்றவற்றை வாங்குவது சிறந்தது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.